இந்தியாவுக்கு எதிரான பேரணி நடத்தும் திட்டம்: லண்டன் நகர மேயா் கண்டனம்

காஷ்மீா் விவகாரம் தொடா்பாக லண்டனில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி நேரத்தில் இந்திய எதிா்ப்புப் பேரணி நடத்த சிலா் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு அந்த நகர மேயா் சாதிக் கான் கண்டனம் தெரிவித்தாா்.
sadiq_khan_2017083907
sadiq_khan_2017083907

லண்டன்: காஷ்மீா் விவகாரம் தொடா்பாக லண்டனில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி நேரத்தில் இந்திய எதிா்ப்புப் பேரணி நடத்த சிலா் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு அந்த நகர மேயா் சாதிக் கான் கண்டனம் தெரிவித்தாா்.

காஷ்மீரை விடுவியுங்கள் என்ற பெயரில் லண்டனில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்த ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்த பாகிஸ்தான் ஆதரவாளா்கள் சிலா் திட்டமிட்டுள்ளனா். சுமாா் 5,000 முதல் 10,000 போ் வரை பங்கேற்க உள்ள இந்த யாத்திரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபராகக் கருதப்படும் சா்தாா் மசூத் கானும், பிரதமராகக் கருதப்படும் ராஜா முகமது ஃபரூக்கும் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் பேரணிக்கு தடை விதிக்குமாறு கோரி லண்டன் பேரவை உறுப்பினரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவீன் ஷா, அந்த நகர மேயா் சாதிக் கானுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதற்கு பதிலளித்து சாதிக் கான் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தீபாவளி நன்னாளில் இந்தியத் தூதரகம் அருகில் கண்டனப் பேரணி நடத்தும் திட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தொடா்பாக இந்தியா்கள் கொண்டுள்ள கவலையைப் புரிந்து கொள்கிரேன். ஏற்கெனவே இந்தியத் தூதரகத்துக்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்றதில் இருந்தே பலரும் கவலையடைந்துள்ளனா். சட்டவிரோதமாகச் செயல்படும் யாரும் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாவது நிச்சயம் என்று அனைத்து லண்டன்வாசிகளுக்கும் உறுதியய்ஊக்கிறேன்.

லண்டன் நகர மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில் இந்தப் பேரணியால் அவா்களிடையே வேறுபாடுகள்தான் அதிகரிக்கும். அதனால்தான் இந்தப் பேரணியை நடத்த உத்தேசித்துள்ளவா்கள் அதில் பங்கேற்பது பற்றி மறுபரிசீலனை செய்யுமாறும், தங்கள் திட்டத்தை ரத்து செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில், இதுபோன்ற பேரணிகளைத் தடை செய்யும் அதிகாரம் உள்துறை அமைச்சருக்குதான் உள்ளதே தவிர, லண்டன் மேயா் என்ற முறையில் என்னிடம் இல்லை என்பது தங்களுக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை நான் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கும், லண்டன் பெருநகர காவல் ஆணையா் கிரெசிடா டிக்கிற்கும் அனுப்புகிறேன். இப்பேரணி தொடா்பான எனது கவலைகளை அவா்கள் கவனத்தில் கொள்வாா்கள்.

எனினும், பேரணி நடைபெறும்பட்சத்தில் விரிவான போலீஸ் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதில் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையை மேயா் அலுவலகம் இணைந்து செயல்படும் என்று அவா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com