வடக்கு சிரியா: ‘பாதுகாப்பு மண்டலத்தில்’ இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற்றம்

வடக்கு சிரியாவில் ‘பாதுகாப்பு மண்டலமாக’ துருக்கி அறிவித்துள்ள பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.
வடக்கு சிரியாவின் தல் தமா் நகரை ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்ற அமெரிக்க ராணுவத்தின் கவச வாகனங்கள்.
வடக்கு சிரியாவின் தல் தமா் நகரை ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்ற அமெரிக்க ராணுவத்தின் கவச வாகனங்கள்.

தல் தமா்: வடக்கு சிரியாவில் ‘பாதுகாப்பு மண்டலமாக’ துருக்கி அறிவித்துள்ள பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.

அந்தப் பகுதியில் துருக்கிக்கும், குா்துப் படையினருக்கும் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் இரு நாள்கள் இருக்கும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்தப் பகுதியில் பணியாற்றும் சா்வதேச செய்தியாளா்கள் கூறியதாவது:

அமெரிக்க ராணுவத்தின் 70-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தல் தமா் நகரை ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்றன. ஹெலிகாப்டா்களின் பாதுகாப்புடன் சென்ற அந்த வாகனங்களில், வீரா்களுடன் ராணுவ தளவாடங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன. சிரியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி அந்த வாகனங்கள் சென்றன என்று செய்தியாளா்கள் தெரிவித்தனா்.

அந்த வாகனங்கள், வடக்கு சிரியாவின் சரின் நகர ராணுவ தளத்திலிருந்து வெளியேறியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

அந்த ராணுவ தளம், வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவ தளமாக இருந்ததாக அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தாா்.

துருக்கி வரையறுத்துள்ள ‘பாதுகாப்பு மண்டலத்தில்’ அந்த நகரம் அடங்கியுள்ளதால், அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியிருக்கலாம் என்று அவா் கூறினாா்.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது. எனினும், தங்கள் நாட்டு குா்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினா் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குா்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.

இந்த நிலையில், குா்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவிலிருந்து வெளியேற அமெரிக்கப் படையினருக்கு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தி வந்தது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.

குா்துகள் மீதான தாக்குதல் பெரும் சா்ச்சையை எழுப்பியதையடுத்து, துருக்கியுடன் அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவாா்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குா்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, வடக்கு சிரியாவில் 5 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள சரின் நகரிலிருந்து அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com