புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை தொடங்கியது சீனா: இந்தியாவுக்குப் போட்டி

வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவுக்குப் போட்டியளிக்கும் வகையில், புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை சீனா தொடங்கியுள்ளது. 
புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை தொடங்கியது சீனா: இந்தியாவுக்குப் போட்டி


வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவுக்குப் போட்டியளிக்கும் வகையில், புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை சீனா தொடங்கியுள்ளது. 
ஸ்மார்ட் டிராகன் 3 (எஸ்டி 3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை ராக்கெட், விண்வெளிக்கு 1.5 டன் எடையளவு பொருள்களை சுமந்து செல்லும் திறன் படைத்ததாகும். 
சீனாவின் முன்னோடி ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ராக்கெட் தொழில்நுட்பத்துக்கான சீன அகாதெமி இந்த ராக்கெட்டை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தக் கூடிய திறன் படைத்ததாக இந்த எஸ்டி 3 ராக்கெட் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் ஒரு கிலோ எடையுள்ள பொருளை கொண்டு செல்ல ரூ.3.54 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
ஸ்மார்ட் டிராகன் (எஸ்டி) பிரிவில் சீனா இதுவரை 3 வகையிலான ராக்கெட்டுகளை வடிவமைத்துள்ளது. இதில் எஸ்டி 1 வகை ராக்கெட் 200 கிலோ எடையை சுமந்துசெல்லக் கூடியதாகும். கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி அந்த ராக்கெட் முதல்முறையாக இயக்கப்பட்டது. 
எஸ்டி 2, எஸ்டி 3 ராக்கெட்டுகள் முறையே 2020, 2021-இல் தங்களது முதல் பயணத்தை தொடங்கவுள்ளன. இதில் எஸ்டி 2 ராக்கெட் 500 கிலோ எடையையும், எஸ்டி 3 ராக்கெட் சுமார் 1.5 டன்னுக்கும் அதிகமான எடையையும் விண்வெளிக்கு சுமந்து செல்லக் கூடியதாகும். 
நிலவுக்கும், செவ்வாய்க்கும் ராக்கெட் அனுப்புவது, வரும் 2022-ஆம் ஆண்டில் தனக்கென விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி மையம் அமைப்பது என சீனா விண்வெளித் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், பிற நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்துவதில் இந்தியாவைக் காட்டிலும் சீனா பின்தங்கியுள்ளது. 
இதைக் குறிப்பிட்டு அந்நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கடந்த 2017-ஆம் ஆண்டில் கட்டுரை வெளியிட்டிருந்தது. மிகக் குறைந்த செலவில் அந்நிய நாடுகளின் செயற்கைகோள்களை விண்வெளிக்கு செலுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டிருப்பது, சீனா எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய விஷயம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. 
இச்சூழலில், இந்தியாவுக்கு போட்டியளிக்கும் வகையில் வர்த்தக ராக்கெட் சேவையை சீனா தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com