
சிரியாவின் கொபானி நகரைக் கடந்து துருக்கி எல்லையை நோக்கி புதன்கிழமை சென்ற ரஷிய ராணுவ வாகனங்கள்.
வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறியுள்ள நிலையில், துருக்கியுடனான எல்லைப் பகுதியை நோக்கி ரஷியப் படையினர் முன்னேறி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வடக்கு சிரியா விவகாரம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை துருக்கி அதிபர் எர்டோகன் தலைநகர் அங்காராவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் வடக்கு சிரியா எல்லைப் பகுதிக்குள் துருக்கி நிர்ணயித்துள்ள பாதுகாப்பு மண்டலத்திலிருந்து குர்துப் படையினர் 150 மணி நேரத்துக்குள் வெளியேறுவதை உறுதி செய்ய விளாதிமீர் புதின் ஒப்புக் கொண்டார்.
அவ்வாறு அவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக, குர்துகள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க எர்டோகனும் சம்மதித்தார்.
குர்துகளிடமிருந்து துருக்கி அண்மையில் கைப்பற்றிய பகுதிகள் தொடர்ந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
பாதுகாப்பு மண்டலத்திலிருந்து குர்துப் படையினர் வெளியேறுவதற்கான கெடு, புதன்கிழமை மதியத்திலிருந்து தொடங்கியது.
இந்த நிலையில், துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எல்லைப் பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து குர்துப் படையினர் வெளியேறுவதை உறுதி செய்வதற்காக, அந்தப் பகுதியை நோக்கி ரஷியா ராணுவம் புதன்கிழமை முன்னேறத் தொடங்கியது.
ஏற்கெனவே, முக்கியத்துவம் வாய்ந்த எல்லை நகரங்களான கொபானி, மன்பிஜ் ஆகிய நகரங்களுக்குள் நுழைந்த ரஷிய ராணுவம், தற்போது பாதுகாப்பு மண்டலத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா - துருக்கி எல்லைப் பகுதியை நோக்கி தங்களது படையினர் வேகமாக முன்னேறிச் செல்வதாவும், புதன்கிழமை மதியம் யூஃப்ரடீஸ் நதியை அவர்கள் கடந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குர்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது. எனினும், தங்கள் நாட்டு குர்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினர் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குர்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.
இந்த நிலையில், குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவிலிருந்து வெளியேற அமெரிக்கப் படையினருக்கு அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள குர்துப் படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது.
தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான பாதுகாப்பு மண்டலத்தை வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியதையடுத்து, துருக்கியுடன் அமெரிக்கா கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குர்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்தப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், ரஷியாவுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் போர் நிறுத்தத்தை துருக்கி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு மண்டலத்திலிருந்து குர்துகள் வெளியேறுவதை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதியை நோக்கி ரஷியப் படையினர் முன்னேறி வருகின்றனர்.