மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருட்டு: சந்தேக வளையத்தில் ஆளும்கட்சி?

இந்தியாவில் உள்ள முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள், இஸ்ரேலிய இணைய நுண்ணறிவு நிறுவன மென்பொருள் மூலம் திருடப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் தகவல் திருட்டு
வாட்ஸ் அப் தகவல் திருட்டு

புது தில்லி: இந்தியாவில் உள்ள முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள், இஸ்ரேலிய இணைய நுண்ணறிவு நிறுவன மென்பொருள் மூலம் திருடப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், உலகம் முழுவதிலும் இருந்து  தனது 1400 பயனாளர்களின் கணக்குகளில் உளவு பார்த்து தகவல்களைத் திருடியதாக, இஸ்ரேலிய இணைய நுண்ணறிவு நிறுவனமான என்.எஸ்.ஓ மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் சாரபில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி தங்களது செயலியில் உள்ள 'காணொளி அழைப்பு' வசதியில் உள்ள ஒரு சிறு பிழையின் வழியாக, என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருள் ஊடுருவி, பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1400 பயனாளர்கள் இந்த தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 100 பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவிலிருந்து பயனாளர்கள் தங்களைத் தொடர்பு கொண்டனர் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.   

ஆனால் தாங்கள் அத்தகைய எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என்றும் இதுதொடர்பாக உண்மையை நிரூபிக்க நீதிமன்றத்தில் கடுமையாக போராடுவோம் என்றும் என்.எஸ்.ஓ நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கடந்த வருடம் மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் நடைபெற்ற பீமா கொரேகான் தலித் போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன் காரணமாக தற்போது இந்த சர்ச்சையில் பாஜகவைத் தொடர்புபடுத்தி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உளவுச் செயலில் ஈடுபட்ட பாஜக பிடிபட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும  என்றும் பதிவிட்டுள்ளார். 

ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக முடிந்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சவால் விட்டுள்ளது. 

முன்னதாக இவ்வருடம் மே மாதம் வாட்ஸ் அப் நிறுவனமானது உளவுச்செயலி ஒன்றின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்களை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com