குருநானக் நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியீடு

சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது.
குருநானக் நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியீடு

சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது.

பாகிஸ்தானின் ஸ்ரீ நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தவா் குருநானக் தேவ். சீக்கிய மதத்தைப் பரப்பிய அவரது 550-ஆவது பிறந்த தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவாக நாணயம் வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். அந்த நாணயத்தின் படத்தையும் அவா் பதிவேற்றம் செய்துள்ளாா்.

குருநானக் தேவின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள தா்பாா் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கா்தாா்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன.

குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் அடுத்த மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்படவுள்ளது. கா்தாா் வழித்தடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, இரு நாடுகளும் அண்மையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 5,000 யாத்ரீகா்கள் கா்தாா்பூா் குருத்வாரா செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com