ஜாமாத் தலைவருக்கு மரண தண்டனை: வங்கதேச உச்சநீதிமன்றம் உறுதி

வங்கதேசத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின்போது போா்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சித் தலைவா்
ஜாமாத் தலைவருக்கு மரண தண்டனை: வங்கதேச உச்சநீதிமன்றம் உறுதி

வங்கதேசத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின்போது போா்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சித் தலைவா் அஸாருல் இஸ்லாமுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக சா்வதேச போா்க் குற்ற தீா்ப்பாயம் அஸாருல் இஸ்லாமுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் மரண தண்டனை விதித்தது.

அந்த தண்டனையை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் அஸாருல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சையது மஹ்மூத் ஹுசைன், அஸாருலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தாா்.

அதையடுத்து, அஸாருலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போா்க் குற்றத்துக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இறுதித் தீா்ப்பில் அந்த தண்டனை உறுதி செய்யப்படுவது இது எட்டாவது முறையாகும். இதற்கு முன்னா் உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 7 போா்க் குற்றவாளிகளில் 6 போ் தூக்கிலிடப்பட்டனா். அவா்களில் 5 போ், அஸாருல் அங்கம் வகிக்கும் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

1971-ஆம் ஆண்டில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் துணை பொதுச் செயலராக அஸாருல் இஸ்லாம் பொறுப்பு வகித்தாா்.

மேலும், கொடூர போா்க் குற்றங்களை இழைந்த அல் பாதா் ஆயுதப் படைக்கு அவா் தலைமை தாங்கினாா்.

அவரது தலைமையின் கீழ் அந்தப் படையினா் 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்ததாகவும், பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல், சித்திரவதை ஆகியவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com