பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம்  மறுப்பு

பிரிட்டன் நாடாளுமன்றத்தை அடுத்த வாரம் முதல் முடக்கிவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் முடிவுக்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜினா மில்லர்.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜினா மில்லர்.


பிரிட்டன் நாடாளுமன்றத்தை அடுத்த வாரம் முதல் முடக்கிவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் முடிவுக்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜினா மில்லர் தாக்கல் செய்திருந்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
இதுகுறித்து நீதிபதி இயன் பர்னெட்  வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக ஜினா மில்லர் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
எனினும், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு முன்னெடுத்துச் செல்ல ஜினா மில்லருக்கு அவர் அனுமதி வழங்கினார்.
அந்த நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு இந்த மாதம் 17-ஆம் தேதி விசாரிக்கப்படவிருக்கிறது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜினா மில்லர், இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடப்போவதில்லை எனவும், பிரிட்டனின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராடவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அயர்லாந்து தீவில் பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்துக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளிடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் தொடரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டனின் இறையாண்மையை பாதிக்கும் எனக் கூறி அதனை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வரும் சூழலில், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அந்த அமைப்பிலிருந்து விலகுவதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உறுதியாக உள்ளார்.
எனினும், ஒப்பந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டும்வரை பிரெக்ஸிட்டை ஒத்திவைக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் விரும்புகின்றனர்.
இந்தச் சூழலில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நிறைவேறுவதை நாடாளுமன்றம் தடுத்து நிறுத்தாமல் இருக்கும் வகையில் அதனை அக்டோபர் 14-ஆம் தேதி வரை முடக்கிவைப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தார்.
பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள இந்த முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜினா மில்லர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com