உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலையீடு கூடாது: ஹாங்காங் அரசு

உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு  அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என


உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு  அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஹாங்காங் அரசு இவ்வாறு கூறியுள்ளது.
ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து 14 வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதால், ஹாங்காங் அரசு அதனை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.   பிரிட்டன் வசமிருந்த ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து இப்படி ஒரு போராட்டத்தை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் பங்கேற்றோர், ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு  பேரணியாக சென்று, ஜனநாயக போராட்டத்துக்கு அமெரிக்க ஆதரவளிக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். மேலும், இது தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்காவின் சார்பில் தேவையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
இந்த சம்பவத்தையடுத்து, ஹாங்காங் நகரத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் பதிலடி நடவடிக்கைகளில் அமெரிக்க தலையிடக் கூடாது என ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது: 
அமெரிக்காவுடனான  ஹாங்காங்கின் பொருளாதார விவகாரங்களில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது பரஸ்பர நன்மைகளுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். ஹாங்காங்கின் விவகாரங்களில் எந்தநாடு தலையீடு என்பதும் முற்றிலும் தேவையற்றதும், பொருத்தமற்றதும் ஆகும் என்றார் அவர். 
குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் ஹாங்காங் குடிமக்களை, சீனாவுக்கு  நாடுகடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை ஹாங்காங்  நாடாளுமன்றத்தில் அந்த நகர அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
அந்த வரைவுச் சட்டத்தின்படி, சீன அரசால் தேடப்படும் ஹாங்காங் குடிமக்களையும் நாடுகடத்த முடியும்.
இதன் மூலம், சீன அரசு அளித்திருந்த வாக்குறுதியான ஒரு தேசம், இரண்டு ஆட்சி முறை என்று கொள்கைக்கு முடிவு கட்டப்படுவதாக ஜனநாயக ஆதரவாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவுக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்,  நாடுகடத்தல் மசோதா நிரந்தரமாக விலக்கிக் கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்ட நிலையிலும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com