வர்த்தக கட்டுப்பாடுகளால் சீனாவுக்கு பல லட்சம் கோடி டாலர் இழப்பு

சீனாவுக்கு எதிராக தமது அரசின் நிர்வாகம் விதித்துள்ள பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளால் அந்தநாடு பல லட்சம் கோடி டாலரை இழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தக கட்டுப்பாடுகளால் சீனாவுக்கு பல லட்சம் கோடி டாலர் இழப்பு


சீனாவுக்கு எதிராக தமது அரசின் நிர்வாகம் விதித்துள்ள பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளால் அந்தநாடு பல லட்சம் கோடி டாலரை இழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளைமாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் மேலும் கூறியதாவது:
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மிக மோசமான அணுகுமுறையை கையாள்வதே சீனாவின் நோக்கமாக உள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிப்புகளை அமல்படுத்தியுள்ளதால் பல லட்சக்கணக்கான கோடி டாலர்களைப் பெற்று நாங்கள் லாபமடைந்துள்ளோம். அதேநேரம், சீனாவுக்கு பல லட்சம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், அந்த நாட்டில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளும் பறிபோயுள்ளது. பல்வேறு தொழில்நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. 
சர்வதேச தொழில்நுட்ப திருட்டை நாம் தடுத்து நிறுத்த  வேண்டும். அறிவுசார் சொத்துகளை திருடும் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் நமது நாடு சிறப்பாக செயல்படுகிறது என்றார் அவர்.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களைவிட, அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு மிகக் குறைவாக உள்ளதால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சீனாவிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
அதற்காக, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக 25,000 கோடி டாலர் (சுமார் ரூ.17 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். 
அத்துடன், மேலும் 30,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி விதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டார்.  
அதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.
இதனால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்தது. பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எனினும், முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.  
இந்த நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டினிடையே அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தடைபட்டுள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 
அதன் பிறகு, ஜூலை மாதத்தில் அமெரிக்கத் தரப்பில் அந்த நாட்டு நிதியமைச்சர் ஸ்டீவன் நுசின், வர்த்தக மேம்பாட்டு அதிகாரி ராபர்ட் லைத்திஸர் ஆகியோர் சீனத் துணைப் பிரதமர் லியு ஹீ, வர்த்தகத் துறை அமைச்சர் ஷான் ஷன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். ஆனால்,  அப்போதும் வர்த்தகப் போரை தவிர்ப்பதற்கான உடன்பாடு எதுவும் எட்டப்படாமலேயே உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com