16 வகை அமெரிக்கப் பொருள்களுக்கு வரிவிலக்கு: சீனா அறிவிப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 16 வகைப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
16 வகை அமெரிக்கப் பொருள்களுக்கு வரிவிலக்கு: சீனா அறிவிப்பு


அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 16 வகைப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இரு நாடுளுக்கும் இடையே வர்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீன இறக்குமதி வரி ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கடல் உணவுப் பொருள்கள், புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், கால்நடைத் தீவனம், மீன் தீவனம், கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை சாதனங்கள் உள்ளிட்ட 14 வகை அமெரிக்கப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வரும் 17-ஆம் தேதியிலிருந்து இந்த வரிவிலக்கு அமலுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சோயா பயறு, பன்றிஇறைச்சி போன்ற முக்கியப் பொருள்கள் வரிவிலக்கு பெறும் பொருள்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களைவிட, அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு மிகக் குறைவாக உள்ளதால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று சீனாவிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
அதற்காக, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளார்.
அதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்துள்ளது.
இதனால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
எனினும், முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா வரி விலக்கு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com