அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு வரி குறைப்பு: சீனா அறிவிப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, சோயா பயறு உள்ளிட்ட சில வேளாண் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு வரி குறைப்பு: சீனா அறிவிப்பு


அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, சோயா பயறு உள்ளிட்ட சில வேளாண் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக சீனா அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சில வேளாண் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை விலக்கிக் கொள்ள, தேசிய கவுன்சிலின் இறக்குமதி வரி ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் சோயா பயறு, பன்றி இறைச்சி போன்ற பொருள்களுக்கும் இந்த வரி குறைப்பு பொருந்தும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மதிப்பைவிட, தங்கள் நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பு குறைவாக உள்ளதாகவும், இதனால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சீர்செய்யும் வகையில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய சீனப் பொருள்கள் மீது அவர் கூடுதல் இறக்குமதி விதித்து வருகிறார்.
அதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.
இதனால், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர்ப் பதற்றம் அதிகரித்தது.
அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
எனினும், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கடல் உணவுப் பொருள்கள், புற்றுநோய் மருந்துகள், கால்நடைத் தீவனம், மீன் தீவனம், கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை சாதனங்கள் உள்ளிட்ட 16 வகைப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை விலக்கிக் கொள்வதாக சீனா கடந்த புதன்கிழமை அறிவித்தது.
அதையடுத்து, 25,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள் மீது (சுமார் ரூ.17.7 லட்சம் கோடி) கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப்பும் அறிவித்தார்.
இந்த நிலையில், முந்தைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின்போது அதிகம் விவாதிக்கப்பட்ட பன்றி இறைச்சி, சோயா பயறு உள்ளிட்ட அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் இறக்குமதி வரியை சீனா விலக்கிக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com