சவூதி எண்ணெய் ஆலைகள் மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சவூதி அரேபியாவிலுள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது யேமனின் ஹூதி கிளர்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அந்த ஆலைகள் தீப்பிடித்து எரிந்தன.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் தீப்பிடித்த அப்காய்க் எண்ணெய் ஆலை (விடியோ படம்).
ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் தீப்பிடித்த அப்காய்க் எண்ணெய் ஆலை (விடியோ படம்).

சவூதி அரேபியாவிலுள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது யேமனின் ஹூதி கிளர்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அந்த ஆலைகள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அப்காய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த ஆலைகளில் தீப்பிடித்தது. அதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்தத் தாக்குதலை நடத்தியதது யார் என்ற விவரமோ, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்தும் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை. சம்பவப் பகுதிகளுக்குச் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் ஆலைகளின் உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
யேமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
யேமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், யேமனில் அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. 
எனினும், சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுக்கு, அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது.
அரசுப்  படையினருக்கு ஆதரவாக, ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா விமானங்கள் மூலமும் சவூதி அரேபியாவுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com