அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வடகொரியா நிபந்தனை

அணுசக்திப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமெனில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை விதித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வடகொரியா நிபந்தனை

அணுசக்திப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமெனில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை விதித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.வின் தடையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்த வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடையை விதித்தது.
இதனால் பணிந்து வந்த வடகொரியா, அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கின.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்துப் பேசினர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அணு ஆயுதங்களைக் கைவிடுவதில் வடகொரியாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தால்தான் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.  அதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தையைத் தொடர இருப்பதாக வடகொரியா அறிவித்திருந்தது.
இதனிடையே, குறுகிய தொலைவு ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்தது. இது, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மீண்டும் தொய்வை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
எங்கள் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல்களும், வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளும் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி அகற்றப்படுவது உறுதியானால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.
எந்தவொரு பேச்சுவார்த்தையின்போதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதை வடகொரியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தை என்றாலே நிபந்தனை விதிக்கக் கூடிய நாடு வடகொரியா அல்ல என்றார் அவர். 
வடகொரியாவின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவுடன் வரும் வாரங்களில் அணுசக்திப் பேச்சுவார்த்தை தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com