திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்: ஹாங்காங் போலீஸார் குற்றச்சாட்டு

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் என்ற பெயரில் போராட்டக்காரர்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு போலீஸார்
திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்: ஹாங்காங் போலீஸார் குற்றச்சாட்டு

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் என்ற பெயரில் போராட்டக்காரர்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சீன ஆதரவாளர்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதான குற்றச்சாட்டையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்த பின்னரும் தொடர்கின்றன. அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாள்களான கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கின் பல்வேறு இடங்களில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விதித்திருந்த தடையையும் மீறி ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீனா, ஹாங்காங் அரசுக்கு எதிராக கோஷங்களுடன் ஊர்வலம் நடத்தினர். மற்றொருபுறம் சீன அரசுக்கு ஆதரவான தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.
தொடக்கத்தில் போராட்டம் அமைதியாக நடைபெற்றாலும், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புப் படையினர் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. அவர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதுடன், தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.
போராட்டத்தின்போது சீன ஆதரவாளர்கள், ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும், தங்களிடம் தனியாக சிக்கிய எதிர்த்தரப்பு நபர்களை அடித்து உதைத்தனர். போலீஸார் சிலரும் இவ்வாறு தாக்குதலுக்கு ஆளானதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஹாங்காங் போலீஸார், சீன ஆதரவு போராட்டக்காரர்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஹாங்காங் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜான் டிஸி, திங்கள்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் விடியோக்களையும் அவர் வெளியிட்டார். அதில்,  தனிநபர்கள் சிலரை, போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குவதும், இதில் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுவதும் இடம் பெற்றுள்ளது. இது தவிர தங்களிடம் தனியாக சிக்கிய காவலர் ஒருவரையும் வன்முறையாளர்கள் தாக்கும் காட்சி விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜான் டிஸி கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டே வன்முறையில் ஈடுபடுகின்றனர். நான்கு இடங்களில் தனிநபர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. போராட்டத்தின்போது எந்தப் பிரிவினருக்கும் ஆதரவாக போலீஸார் செயல்படவில்லை' என்றார்.
அதே நேரத்தில், சீனத் தரப்புக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் உதவுவது, அவர்களது அடையாளத்தை மறைக்க போலீஸார் முயலுவது போன்ற விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு நபர், இரு போலீஸாரின் பாதுகாப்புடன், பத்திரிகையாளர் ஒருவரை அடித்து உதைப்பதும் இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com