இஸ்ரேலில் 2-ஆவது முறையாக பொதுத் தேர்தல்: கடும் சவாலை எதிர்கொள்கிறார் நெதன்யாகு

இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களுக்குள் 2-ஆவது முறையாக பொதுத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜெருசலேமில் தனது மனைவியுடன் வாக்களித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜெருசலேமில் தனது மனைவியுடன் வாக்களித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.


இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களுக்குள் 2-ஆவது முறையாக பொதுத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் பெரும்பான்மைய நிரூபிக்க முடியாததால், இந்தத் தேர்தல் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் நெதன்யாகு கடும் சவாலை எதிர்கொள்வதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இதன் மூலம், அவர் 5-ஆவது முறையாக அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. பழமைவாதக் கட்சியான ஐக்கிய டோரா யூதக் கட்சிக்கு 7 இடங்களும், ஆளும் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சி 35 இடங்களையும் கைப்பற்றின.
இந்தச் சூழலில், வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சியமைக்க நெதன்யாகு முயற்சி செய்து வந்தார்.
எனினும், இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதிலிருந்து பழைமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு நிலவியதையடுத்து, நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, 21-ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்த நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படியில், 22-ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தல், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் பிரதமர் நெதன்யாகுவின் ஆட்சி தொடர்பான பொதுவாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில், நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கும், பெஞ்சமின் காண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சிக்கும் இடையே சமமாக போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, புதிய அரசை அமைப்பதில் பிற கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com