நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிரான மனு: பிரிட்டன் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளதற்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக சேவகர்
பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிரான மனு மீதான விசாரணையை முன்னிட்டு, லண்டனிலுள்ள உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த இந்திய வம்சாவளி சமூக சேவகர் ஜீனா மில்லர் (நடுவே).
பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிரான மனு மீதான விசாரணையை முன்னிட்டு, லண்டனிலுள்ள உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த இந்திய வம்சாவளி சமூக சேவகர் ஜீனா மில்லர் (நடுவே).


பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளதற்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜீனா மில்லர் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜீனா மில்லர் தாக்கல் செய்த மனுவை, அந்த நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
எனினும், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு முன்னெடுத்த செல்ல, ஜீனா மில்லருக்கு நீதிபதி இயன் பர்னெட் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக ஜீனா மில்லர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரிக்கத் தொடங்கியது.
அந்த மனுவுடன், நாடாளுமன்ற முடக்கத்தை சட்டவிரோதமாக அறிவித்து ஸ்காட்லாந்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பிரிட்டன் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும் உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்கத் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெக்ஸிட்டைவிட முக்கியமானது: உச்சநிதிமன்றத்தில் தனது மேல் முறையீடு குறித்து ஜீனா மில்லர் கூறுகையில், பிரெக்ஸிட் விவகாரத்தைவிட,  பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள விவகாரம்தான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆபத்து நிறைந்த நாடாளுமன்ற முடக்கத்தை எந்த விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதன் மூலம், நமது ஜனநாயகப் பண்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும் என்றார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உறுதியாக உள்ளார்.
எனினும், சிறப்பு ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுவதால், ஒப்பந்தம் எட்டப்படும்வரை பிரெக்ஸிட்டை நீடிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளார்.
இந்த முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜீனா மில்லர் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com