நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானதல்ல: உச்சநீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு வாதம்

சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டே பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது பிரிட்டன் அரசு தரப்பு புதன்கிழமை வாதிட்டது.
லண்டனிலுள்ள உச்சநீதிமன்றம் எதிரே பிரிட்டன் கொடியை ஏந்தி பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக புதன்கிழமை கோஷமிட்ட பெண்கள்.
லண்டனிலுள்ள உச்சநீதிமன்றம் எதிரே பிரிட்டன் கொடியை ஏந்தி பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக புதன்கிழமை கோஷமிட்ட பெண்கள்.


சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டே பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது பிரிட்டன் அரசு தரப்பு புதன்கிழமை வாதிட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கி வைத்துள்ளதற்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜீனா மில்லர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜேம்ஸ் ஈடி,  நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது அல்ல என்று வாதிட்டார்.
எனினும், நாடாளுமன்றத்தை முடக்கியதற்கான விளக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்காதது குறித்து நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இந்த விவகாரத்துக்கு சட்டரீதியிலாக பிரதமர் பொறுப்பேற்காததை ஒப்புக் கொண்ட வழக்குரைஞர் ஜேம்ஸ், எனினும், மற்ற முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உறுதியாக உள்ளார்.
எனினும், சிறப்பு ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுவதால், ஒப்பந்தம் எட்டப்படும்வரை பிரெக்ஸிட்டை நீடிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கடந்த 9-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கிவைக்க பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜீனா மில்லர் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், சட்டத்துக்கு உள்பட்டே நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com