இஸ்ரேல்: தேசிய அரசு அமைக்க எதிர்க்கட்சிக்கு நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஷிமான் பெரெஸின் நினைவுதினத்தை முன்னிட்டு ஜெருசலேம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ரூவென் ரிவ்லின் 
இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஷிமான் பெரெஸின் நினைவுதினத்தை முன்னிட்டு ஜெருசலேம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ரூவென் ரிவ்லின் 


இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது.
வியாழக்கிழமை 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெஞ்சமின் காண்ட்ஸின் தலைமையிலான புளூ அண்டு ஒயிட் கட்சி 33 இடங்களிலும், நெதன்யாகுவின் தலைமையிலான லிக்குட் கட்சி 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்தான் செவ்வாய்க்கிழமை மறுதேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலிலும் அதே நிலை நீடிப்பதால், மீண்டும் 3-ஆவது முறையாக தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தடுக்கும் வகையில் புளூ அண்டு ஒயிட் கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் தேர்தலில் வலதுசாரி அரசை அமைக்க விரும்பினேன்.
ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
எனவே, அனைத்துக் கட்சியினரும் இடம் பெறும் தேசிய ஒற்றுமை அரசை அமைக்க அழைப்பு விடுத்துள்ளேன். இதுகுறித்து மேலும் விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவரான பெஞ்சமின் காண்ட்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.
இதற்கிடையே, நெதன்யாகுவை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் ஆவணத்தில் அவரும், அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
எனினும், தேசிய அரசு அமைந்தால் அதில் தன்னைத்தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பெஞ்சமின் காண்ட்ஸ் வலியுறுத்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இதன் மூலம், அவர் 5-ஆவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை அவரால் பெற முடியாததால், 21-ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 22-ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், பல கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு அமைவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com