நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர்கள் துன்புறுத்தல்! கனடா பெண் பகீர் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த ஸாரா ஸ்டெஃபனி லான்ட்ரி (Sarah Stephanie Landry)
நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர்கள் துன்புறுத்தல்! கனடா பெண் பகீர் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த ஸாரா ஸ்டெஃபனி லான்ட்ரி (Sarah Stephanie Landry) என்ற
இளம் பெண், தான் அங்கு தங்கியிருந்த போது நடந்த சில சம்பவங்கள் குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.  அதில் நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று அவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ நித்யா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற ஆசிரமப் பெயருடைய ஸாரா குருகுல பணிக்காக நித்யானந்தாவால் அமர்த்தப்பட்டார். நித்யானந்தா பற்றிய பல உண்மைகளை நேரில் கண்ட ஸாரா அவர் நம்பத்தகுந்தவர் இல்லை என்று தெரிந்து தன் சொந்த நாடான கனாவுக்குத் திரும்பி விட்டார். அதன் பின் தன் பெயரில் யூட்யூப் சானல் ஒன்றைத் தொடங்கி அடிக்கடி தனது அனுபவங்களையும் மனக் குறைகளையும் பகிர்ந்து வருகிறார். அவரது முந்தைய விடியோ ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் ஸாரா:

'இந்தியாவில் காவி புனிதம்தான். ஆனால் அதை அணியும் நபர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியாவில் ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் நித்யானந்தாவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் நான் நம்பினேன். எனக்கு படைப்பு சுதந்திரம் மிகவும் பிடித்தமானது. வலைத்தளத்தில் எழுதுவது, விடியோ வெளியிடுவது என்பதெல்லாம் மனதுக்கு உகந்த விஷயங்கள். வாழ்க்கையை உள்ளபடி வாழுங்கள் என்று கூறும் ஆசிரமக் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.

மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட நித்தியானந்தாவின் நேரலைக் காணொளிகளால் கவரப்பட்டு இந்தியாவுக்கு வர வேண்டும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மற்றவர்களுக்கு நித்யானந்தாவை அடைவது கடினமாக இருந்தது. விசா கிடைப்பதும் கஷ்டம்தான். ஆனால் எனக்கு அது எளிதாகக் கிடைத்தது. இங்கு வந்து சேர்ந்ததும் நான் கேட்ட முதல் சொற்பொழிவே எனக்கு பிரத்யேகமாக இருந்தது. என்னுடைய கேள்விகளுக்கு நித்தியானந்தா பதில் அளிப்பது போலத் தோன்றியது. வாழ்க்கையில் சரி தப்பு என்று எதுவுமில்லை, அந்தப் பகுதி வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. வாழ்க்கையில் அனேக விஷயங்களை அப்படியே கடந்து போக வேண்டும் என்று அவர் பேசினார். எது தவறு என்றால், எல்லாவற்றிலும் சக்தியற்றவராக (powerless)  இருப்பதுதான் என்று கூறினார். அன்றைய சத்சங்கம் நன்றாக இருந்தது. என் தனிப்பட்ட பிரச்னைக்கு அவர் மிகத் துல்லியமான பதிலை சொன்னார். ஒருவர் நடிக்க ஆசைப்பட்டால் அதை செய்துவிட வேண்டும். அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். என்னைப் போல ஒருத்திக்கும் அதேதான் தோன்றியது. கனவை பின் தொடர்வது என்பதை அந்த நேரலை சத்சங்கத்தில் உறுதி பூண்டேன். மேலும் அவர் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அதைப் பார்த்துதான் ஆசிரமத்தில் சேர்ந்தேன்’ இப்படி நீளும் அந்தக் காணொளியில் அவர் நித்யானந்தாவைப் பற்றிய தவறான புரிதல் தனக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விரிவாகவே பேசியுள்ளார்.

மீண்டும் ஸாரா அண்மையில் ஒரு காணொளியை வெளியிட்டு நீண்ட இடைவெளிக்கு மன்னிப்பு கேட்டார். இந்தக் காணொளியில் அவர் பேசியது, '2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து நான் வெளியேறினேன். அங்கு நடந்த சில விஷயங்கள் தவறாக எனக்குப் பட்டது. இதற்கு முக்கிய காரணம் நான் அங்கு இருந்த சமயத்தில் என்னுடைய நாட்களும் பொழுதுகளும் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று நான் தவறாக நினைத்துவிட்டேன். அது முற்றிலும் பொய்யானது என்பது பின்னர்தான் புரிந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்திலுள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு குருகுல ஆச்சார்யாவாக ஒரு ரகசிய வேலைக்காக என்னை அனுப்பினார்கள். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர் சிறுமியர் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தீவிரமான சில பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாம் கண்ணைத் திறப்பது உள்ளிட்ட கடின பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயக்குவது குறித்தும், அதில் கணக்குகளை தொடங்கி அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலைதான் என்னுடையது. அதற்காக தினமும் அவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும். அதனால்தான் அவர்கள் என்னிடம் நெருக்கமாகப் பழகினார்கள்.
 
குருகுலத்தில் நான் இருந்த சமயத்தில், குழந்தைகளுடன் பேச முடியும். அவர்களுக்கு சோஷியல் மீடியா விஷயங்களை சொல்லித் தருவதால் என்னிடம் தயங்காமல் பேசுவார்கள். ஒரு நாள் இரண்டு குழந்தைகள் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். என்னைப் பார்த்ததும் அவர்கள் கதறி அழுதார்கள். அவர்கள் ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி அழுதபடி கூறினார்கள். சிறுமிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஆனால் அவளால் கூற முடிந்தது எல்லாம் அங்கு எல்லாமே பொய் என்பதுதான். ஆசிரமத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சியில் குருவை நினைத்து சாதனா செய்ய வேண்டும். கண்களை கட்டி சில மந்திரங்களை சொல்ல வேண்டும். இப்படி பல விதிமுறைகள் உண்டு. மூன்றாம் கண்களைத் திறக்க பயிற்சி எடுத்துக் கொண்டனர். அந்த ஆசிரமத்தில் குழந்தைகளை மிகவும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். இயற்கை உபாதைகளைக் கூட அவர்களால் கழிக்க முடியாது. அடி உதை என பயிற்சிகள் கடினமாக இருந்தது. அங்கு திரும்பிச் செல்ல பயந்துதான் கண்களை கட்டிவிட்டு குறி சொல்லும் சிறப்பு சக்தி இருப்பதாக பொய் சொன்னேன் என்றாள் அந்த சிறுமி.

நித்யானந்தாவின் மீதான என் நம்பிக்கைகள் அப்போதிலிருந்து உடையத் தொடங்கியது. பிடதி திரும்பிய பின் இது குறித்து ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவிடம் கேட்டேன். ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பக்கம் பார்த்தால் நானும்கூட நித்யானந்தாவால் மூளை சலவை செய்யப்பட்டிருந்தேன். உளரீதியாக எனக்கு சில பிரச்னை ஏற்படத்தொடங்கியது. நான் அவரை நம்பினேன். நிறைய நேரம் அவருடன் இருந்தேன். ஆனால் அவருடைய உண்மையான முகம் தெரிந்தவுடன் அங்கிருந்து வெளியேறி என் சொந்த நாடான கனடா திரும்பிவிட்டேன். அந்தக் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்று இந்த விடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார் ஸாரா. அவர் பேசிய அந்த 30 நிமிட காணொளியில் நித்யானந்தாவின் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் ஸாரா. அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் புகார் அளித்துள்ளார் அவர். இதற்கு பதிலடியாக நித்தியானந்தாவின் இணையதளத்தில் அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் குற்றச்சாட்டை ஸாரா முன்வைக்கிறார். அதுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து அப்படி அவர் குற்றம் சுமத்துவது மதத்தின் மீதான தாக்குதல் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com