அந்நியப் படைகளால் பாரசீக வளைகுடா பகுதிக்கு ஆபத்து: ஈரான் குற்றச்சாட்டு

பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்கப்படும் அந்நியப் படைகளால் அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக வந்த ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி.
டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக வந்த ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி.

பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்கப்படும் அந்நியப் படைகளால் அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதிக்கு கூடுதல் படையினரை அனுப்பியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் ஈரான் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அந்த நாட்டுத் தலைநகர் டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் அதிபர் ஹஸன் ரெளஹானி பேசியதாவது:
பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்கப்பட்டு வரும் அந்நிய நாட்டுப் படைகள், இந்தப் பகுதி மக்களிடையேயும், பிராந்தியத்திலும் பிரச்னை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று வெளிநாடுகள் விரும்பினால், அவை இங்கிருந்து விலகியிருக்க வேண்டும்; இங்கு ஆயுதக் குவிப்புப் போட்டியை உருவாக்கக் கூடாது.
பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு, அந்தப் பிராந்திய நாடுகளின் உள்விவகாரம் என்பதே ஈரானின் கொள்கையாகும்.
தற்போது இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்துவதற்கான செயல் திட்டத்தை விரைவில் ஐ.நா.விடம் சமர்ப்பிக்கவிருக்கிறேன்.
இந்த இக்கட்டான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில், அண்டை நாடுகளுடன் நட்புறவையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த ஈரான் தயாராக இருக்கிறது என்றார் அதிபர் ஹஸன் ரெளஹானி.
ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கூட்டாளியான சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலை, எண்ணெய்க் கிணறுகளில் யேமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தினர்.
அதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை கூறியது.
அதனைக் குறிப்பிட்டே ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி தற்போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com