எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடனான வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர்.
எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடனான வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர்.

எரிசக்தி: அமெரிக்காவுடன் ரூ.1.77 லட்சம் கோடி ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

இந்திய - அமெரிக்க எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ரூ.2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கோடி) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய - அமெரிக்க எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ரூ.2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கோடி) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முடிவில், இரு நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் அந்நாட்டின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை சனிக்கிழமை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால், அதை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களுடன் விரிவாக விவாதித்தார். இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்குவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 17 எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிறுவனங்கள், சுமார் 150 நாடுகளில் இயங்கி வருகின்றன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71 லட்சம் கோடி). மேலும், அந்த நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளன.
இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை  அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் பாராட்டினர். 
குறிப்பாக, இந்திய அரசு பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்திருப்பதை அவர்கள் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின் முடிவில், பிரதமர் மோடி முன்னிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெல்லூரியன் எரிவாயு உற்பத்தி நிறுவனத்துக்கும், இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே 2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, டெல்லூரியன் நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கவுள்ள டிரிஃப்ட்வுட் எல்என்ஜி எக்ஸ்போர்ட் டெர்மினல் நிறுவனத்தில், இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் 2.5 பில்லியன் டாலரை முதலீடு செய்யும். அதற்குப் பிரதிபலனாக, ஆண்டுதோறும் 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) 40 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம், பெட்ரோநெட் நிறுவனத்துக்கு அளிக்கும்.
இந்த ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி இறுதிசெய்யவுள்ளன என்று ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட பெட்ரோநெட் நிறுவனத்தில், அரசின் பொதுத் துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் லிமிடெட் ஆகியவை பங்குதாரர்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com