புதிய காஷ்மீர் உருவாக்கப்படும்: பண்டிட் சமூகத்தினரிடம் மோடி உறுதி

அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரிடம் புதிய காஷ்மீரை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
ஹூஸ்டன் நகரில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரை சந்தித்த பிரதமர் மோடி.
ஹூஸ்டன் நகரில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரை சந்தித்த பிரதமர் மோடி.

அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரிடம் புதிய காஷ்மீரை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை, ஹூஸ்டன் நகரில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் சந்தித்துப் பேசினர். அவர்களிடம் மோடி கூறியதாவது:

காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய காஷ்மீரை உருவாக்குவோம். அது, நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாக இருக்கும். முப்பது  ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்து வரும் பண்டிட் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை பண்டிட் சமூகத்தினர் சந்தித்து 
கலந்துரையாடினர். 

இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்களின் முன்னேற்றத்துக்கும் 
பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சீக்கியர்களுடன் சந்திப்பு: ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது, கருப்புப் பட்டியலில் இருந்து 312  சீக்கியர்களை நீக்கியதற்காக மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் 312 சீக்கியர்களின் பெயர்களை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கியது. இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய சீக்கிய சமூக பிரதிநிதிகள் 50 பேர்,  அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், அரசியல் காரணங்களால் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள சீக்கியர்கள், இந்தியா திரும்புவதற்கு விசா, கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com