இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மோடியுடனான சந்திப்பில் டிரம்ப் அறிவிப்பு

"இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அதிபர்
நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு  செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்.
நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு  செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்.

"இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் தொடங்கியுள்ள நிலையில், அதில் உரை நிகழ்த்துவதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் மோடி பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, அதிபர் டிரம்ப்பும், மோடியும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியப் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, இருவருக்கும் இடையே நடைபெற்ற 4-ஆவது சந்திப்பு இதுவாகும்.

அப்போது, "மோடி நலமா' நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். "டிரம்ப், எனது நண்பர் மட்டுமன்றி இந்தியாவின் நல்ல நண்பரும் ஆவார். அவர், ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்த மோடி, ஹூஸ்டன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், மோடி முன்னிலையில் செய்தியாளர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்துக்கான முடிவு எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருகிறோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இதுதொடர்பாக வர்த்தகத் துறை ஆலோசகர் ராபர்ட் லைத்திஸர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்' என்றார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கவும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

"மோடியும், இம்ரானும் பேசி தீர்வு காண முடியும்': காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, டிரம்ப் அளித்த பதில் வருமாறு:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டால், இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால், அதன் மூலம் நல்ல விஷயங்கள் நிகழும். காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் பேசி தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்றார் டிரம்ப்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டால், மத்தியஸ்தம் செய்ய தாம் தயாராக உள்ளதாக, டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பின் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

"சிறந்த பிரதமர்': பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, தலிபான், அல்காய்தா பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக இந்திய செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கான செய்தியை, பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். மிகச் சிறந்த பிரதமரை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அவர் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பார்' என்று டிரம்ப் பதிலளித்தார்.

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமெனில்...

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமெனில், அந்த நாட்டிடமிருந்து சில உறுதியான நடவடிக்கைகளை இந்தியா எதிர்பார்க்கிறது என்று அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டிரம்ப்-மோடி இடையிலான சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு தலைவர்களுக்கும் இடையே 40 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பின்போது, வர்த்தகம், பயங்கரவாத சவால்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் சுமார் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதையும், இந்தியா எதிர்கொண்டுள்ள பயங்கரவாத சவால்களையும் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வேண்டுமென்றே விலகிச் செல்லவில்லை; அதேசமயம், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில் அந்த நாட்டிடம் இருந்து சில உறுதியான நடவடிக்கைகளை இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்வது போல தெரியவில்லை என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்ட அதிபர் டிரம்ப், பயங்கரவாதம் இரு நாடுகளுக்கும் பொதுவான சவால் என்றும் குறிப்பிட்டார் என்று விஜய் கோகலே தெரிவித்தார்.

டிரம்ப்புக்கு அழைப்பு

இந்தியாவுக்கு குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியபோது பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முன்னதாக, ஹூஸ்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மோடி நலமா' நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றபோதும், இதேபோன்ற அழைப்பை அவர் விடுத்திருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com