சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு: 49 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிமுறைகள் தளர்வு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா
சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு: 49 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிமுறைகள் தளர்வு

ரியாத்: சவுதி அரேபியா முதல் முறையாக 49 வெளிநாட்டு சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா வழங்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். சவுதி அரேபியாவிற்கு மெக்கா, மெதினா புனிதப் பயணம் வரும் முஸ்லிம் யாத்ரீகர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும் விசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 49 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதிப்பது நம் நாட்டுக்கான வரலாற்று சிறப்பு மிக்க தருணம். இங்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வியப்படைவார்கள். இங்கு யுனெஸ்கோவின் 5 முக்கிய இடங்கள் இருக்கின்றன.

உலக பாரம்பரியமான கலாச்சாரம், துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மூச்சடைக்கக் கூடிய இயற்கை அழகு நிறைந்த இடங்கள் இருக்கின்றன. 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டம் நாளை சனிக்கிழமை முதல் (செப். 28) செயல்படுத்தப்படும்.

ஆடை கட்டுப்பாடு: சவுதியைச் சேர்ந்த பெண்களுக்கு மேல் உடலை முழுமையாக மூடும் வகையில் ஆடை அணிவது கட்டாயம் என்ற நிலையில், அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரத்து செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஆடைகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து செல்லலாம் என்றாலும், பெண்கள் "அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். 

மது விற்பனை: சவுதி அரேபியாவில் மது வகைகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் விதிமுறையின் கீழ் மது விற்பனை செய்யப்படும். 

இலக்கு 2030: முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா வழங்கும் முறை நாளை தொடங்கப்பட உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கவும் சவுதி அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற முடியும். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் நிலவி வரும் வேலையின்மையைப் போக்குவதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று நம்புகிறது.

ஆனால் அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பதற்கான உள்கட்டமைப்பு தற்போது இல்லை என்றாலும், வரும் காலங்களில் நாடு முழுவதும் 5 லட்சம் புதிய ஹோட்டல் அறைகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.  புதிதாக ஒரு சுற்றுலாத் துறையை கட்டமைக்கும் முயற்சியில் சவுதி அரேபியா பில்லியன்களைக் குவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு செங்கடலில் 50 தீவுகள் மற்றும் பிற அழகிய இடங்களை ஆடம்பர ஓய்வு விடுதிகளாக மாற்றுவதற்காக பல பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்தது.

கடந்த ஆண்டு, ரியாத்துக்கு அருகில் கிடியா "பொழுதுபோக்கு நகரம்" கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, இதில் உயர்நிலை தீம் பூங்காக்கள், மோட்டார் விளையாட்டு வசதிகள் மற்றும் ஒரு சஃபாரி பகுதி ஆகியவை அடங்கும்.

ஜோர்டானிய நகரமான பெட்ராவைக் கட்டிய அதே நாகரிகத்தின் மணற்கல் கல்லறைகளுக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான மடீன் சலே போன்ற வரலாற்று இடங்களையும் சவுதி அரேபியா அரசு உருவாக்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com