Enable Javscript for better performance
பதவி நீக்க விசாரணை: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்தா?- Dinamani

சுடச்சுட

  

  பதவி நீக்க விசாரணை: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்தா?

  By - நாகா  |   Published on : 29th September 2019 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  white-house

   

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்த நாட்டு கீழவையான பிரதிநிதிகள் சபை பதவி நீக்க விசாரணை தொடங்கியுள்ளது.

  ஏற்கெனவே, கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி ரஷியாவுடன் இணைந்து சதி செய்து, தேர்தல் நிதிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்தது, மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு முறைகேடாக நிதி ஒதுக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

  ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி, அதற்கான விசாரணையைத் தொடங்க மறுத்து வந்தார். டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதெல்லாம் வீண் வேலை; அவரை தேர்தலில் எதிர்கொள்வதே சரியாக இருக்கும் என்று அவர் உறுதியாகக் கூறி வந்தார்.

  ஆனால், இந்த விவகாரத்தில் அவ்வளவு பிடிவாதமாக இருந்து வந்த நான்சி பெலோசியே, டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையைத் தொடங்கப் போவதாக அறிவித்ததற்குக் காரணம், தற்போது டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தீவிரம்தான்!

  கடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனை எதிர்கொண்ட டிரம்ப், அடுத்த ஆண்டு தேர்தலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனை எதிர்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் மீது ஊழல் விசாரணை தொடங்க வேண்டுமென்று உக்ரைனின் புதிய அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கியை டிரம்ப் நிர்பந்தித்தார் என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுதான் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை நான்சி பெலோசி தொடங்கியுள்ளதற்குக் காரணம்.டிரம்ப் மீது இந்தக் கடுமையான புகாரைத் தெரிவித்த மர்ம நபர், வெளியுறவு விவகாரங்களில் நன்கு பரிச்சயமுள்ள சிஐஏ அதிகாரி என்று கூறப்படுகிறது. மேலும், அவர் டிரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஜனநாயகக் கட்சியினர் நடத்தும் இந்த விசாரணையில், டிரம்ப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
  எனவே, இந்த விசாரணையின் முடிவில் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அப்படியென்றால், இந்த விசாரணையால் டிரம்ப்பின் அதிபர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா? அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு 14 மாதங்களே இருக்கும் நிலையில், அவர் அவமானகரமாக பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவாரா? என்பது போன்ற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது.

  ஆனால், ஒரு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலே, அவரது பதவி பறிபோய்விட்டது என்று அர்த்தமில்லை என்கிறார்கள் இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்தவர்கள். அமெரிக்காவில் இதுவரை நடத்தப்பட்டுள்ள பதவி நீக்க விசாரணைகளை ஆய்வு செய்தால், டிரம்ப்பின் பதவிக்கு மிகப் பெரிய ஆபத்து இல்லை என்பது புரியும் என்கிறார்கள் அவர்கள்.அமெரிக்க வரலாற்றில், அதிபர் ஒருவர் பதவி நீக்க விசாரணைக்கு உள்படுத்தப்படுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் அதிபர்கள் ஆண்ட்ரூ ஜான்ஸன், ரிச்சர்ட் நிக்ஸன், பில் கிளிண்டன் ஆகியோர் மீது இதே போன்று பதவி நீக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் ஆண்ட்ரூ ஜான்ஸனும், பில் கிளிண்டனும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ரிச்சர்ட் ராஜிநாமா செய்தார். ஆனால், பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ரூ ஜான்ஸனையும், பில் கிளிண்டனையும் அதிபர் பதவியிலிருந்து அகற்ற மேலவையான செனட் சபை மறுப்பு தெரிவித்துவிட்டது. 

  அந்த வகையில், தற்போது டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தொடங்கப்பட்டுள்ள விசாரணையின் முடிவில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபை அவரது பதவியைக்  காப்பாற்றிவிடும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

  அப்படி செனட் சபை டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், சுமார் 20 குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பு. 

  எனவே, டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபை தற்போது தொடங்கியுள்ள பதவி நீக்க விசாரணையால், அவரது பதவிக்கு சொல்லிக் கொள்கிற அளவுக்கு ஆபத்து இல்லை என்றே முடிவுக்கு வரலாம்.

  இருந்தாலும், நாடாளுமன்ற கீழவையின் இந்த பதவி நீக்க விசாரணை இன்னும் 14 மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

  பதவி நீக்கமா, பதவி பறிப்பா?

  அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எந்த அதிபரும், பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக சரித்திரமில்லை. அந்த நாட்டில் பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டே அதிபர்களும், செனட் சபையால் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

  1868 - ஆண்ட்ரூ ஜான்ஸன்

  போர்த் துறை அமைச்சர் எட்வின் மெக்மாஸ்டர்ûஸ பதவியிலிருந்து அகற்றிய விவகாரத்தில், அப்போதைய அதிபர் ஆண்ட்ரூ ஜான்ஸனை பிரதிநிதிகள் சபை பதவி நீக்கம் செய்தது. எனினும், செனட் சபையில் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி  ஜனநாயகக் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.

  1974 - ரிச்சர்ட் நிக்ஸன்

  "வாட்டர் கேட்' ஊழல் விவகாரத்தில் அப்போதைய அதிபர் நிக்ஸனை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணை தொடங்கப்பட்டது. எனினும், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். எனவே, நிக்ஸனை பிரதிநிதிகள் சபை பதவி நீக்கம் செய்ய முடியாமல் போனது.

  1998 - பில் கிளிண்டன்

  வெள்ளை மாளிகை பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில், பதவிப் பிரமாண வாக்குறுதியை மீறி பொய் கூறியதாக அப்போதைய அதிபர் பில் கிளிண்டனை பிரதிநிதிகள் சபை பதவி நீக்கம் செய்தது. எனினும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை செனட் சபை 1999-இல் முறியடித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai