கரோனாவிலிருந்து ஹெல்மெட் காக்குமா? - கேள்விக்குறியாகும் மருத்துவர்களின் பாதுகாப்பு!

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
கரோனாவிலிருந்து ஹெல்மெட் காக்குமா? - கேள்விக்குறியாகும் மருத்துவர்களின் பாதுகாப்பு!

உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தும் கரோனா தொற்றுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் தற்போது 2,567 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனாவில் இருந்து 192 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

கரோனா பரவலைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றி வருகின்றனர். பல பகுதிகளில் மருத்துவர்கள் வீட்டிற்குக் கூட செல்லாமல், குடும்பத்தினரைப் பார்க்காமல் இரவு-பகல் பாராது சேவை புரிந்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகாரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்ற தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சில மருத்துவர்கள் ரெயின்கோட் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பொது சுகாதார அமைப்பின் பலவீனமான நிலையை காட்டுகிறது என்ற கருத்துகள் பரவலாக பேசப்படுகிறது. 

இந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இந்தியா முயற்சி செய்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது. 

ஆனால், இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பலர் சரியான முகக்கவசம் கூட கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகளுக்கு தன்னலம் கருதாது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அரசு முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மேலும், இது மருத்துவர்களை கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாக்குவதாகவும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பிளாஸ்டிக் ரெயின்கோட்டுகள் வழங்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அங்குள்ள இரண்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோன்று ஹரியாணாவில், இஎஸ்ஐ மருத்துவமனையின் டாக்டர் சந்தீப் கார்க், தான் இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். அவரிடம் எந்த N95 முகக்கவசம் இல்லை என்றும் கூறியுள்ளார். அறுவை சிகிச்சையின்போதும் சில நேரங்களில் ஹெல்மெட்டை பயன்படுவதாக அவர் கூறியுள்ளார். 

ஹரியாணாவின் ரோஹ்தக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், பல மருத்துவர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

'நாங்கள் சேவை மனப்பான்மையில், நம்பிக்கை அடிப்படையில் வேலை செய்கிறோம். சுகாதாரத்துறையை நம்புவதன் மூலம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது' என்று தில்லியில் உள்ள அரசு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். 

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.3% பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவிற்கு இது மிகவும் குறைவானது. எனவே, கரோனா போன்ற வைரஸ்களினால் சுகாதார அவசர நிலை ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்கள் சேவை புரியும் மருத்துவர்களின் நலனைக் காக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை ஆகும். மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் நலனிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com