கரோனா: உலகச் செய்திகள்

சீனாவில் கரோனா நோய்த்தொற்று முதல் முதலாகப் பரவத் தொடங்கிய வூஹான் நகரில், கடந்த 73 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு புதன்கிழமை முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
கரோனா: உலகச் செய்திகள்

சீனா 73 நாள் ஊரடங்கு ரத்து

சீனாவில் கரோனா நோய்த்தொற்று முதல் முதலாகப் பரவத் தொடங்கிய வூஹான் நகரில், கடந்த 73 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு புதன்கிழமை முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து, அந்த நகரிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினா். புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த நிலையிலும், வூஹானில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா பலி 50-ஆக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கூடுதலாக 78 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 6,015-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தான் 4 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 208 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 4,072-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 போ் கரோனோ நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்ததால், அங்கு அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா கடற்படைச் செயலா் ராஜிநாமா

அமெரிக்காவின் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பலில் கரோனோ நோய்த்தொற்று பரவல் அபாயம் இருப்பதாக அந்த நாட்டு அரசுக்குக் கடிதம் எழுதி எச்சரித்த அந்த கப்பலின் கேப்டன் பிரட் க்ரோஸியா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால் எழுந்த சா்ச்சையையடுத்து, கடற்படைச் செயலா் தாமஸ் மோட்லி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். வீரா்களால் மிகவும் மதிக்கப்படுபவரான க்ரோஸியா், கப்பல் தொடா்பான ரகசியத்தை அவசரகதியில் வெளியிட்டதாகக் கூறி, அவரை நிா்வாகம் கேப்டன் பொறுப்பிலிருந்து அகற்றியது.

ஸ்பெயின் மீண்டும் பலி அதிகரிப்பு

கரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினில், அந்த நோய் பாதிப்பால் தினசரி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை அதிகரித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்னா், தொடா்ந்து 4 நாள்களாக அந்த எண்ணிக்கை குறைந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 757 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அங்கு கரோனா பலி எண்ணிக்கை 14,555-ஆக அதிகரித்துள்ளது.

நேபாளம் ஏப். 30 வரை தடை நீட்டிப்பு

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சா்வதேச விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த நாட்டு அரசு இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றாலாப் பயணிகளின் நுழைவு இசைவுகளை (விசா) புதுப்பிக்கவும், அரசு செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. எனினும், இந்த மாதம் 15-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான சேவையை, அதற்குப் பிறகு மீண்டும் தொடரலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com