உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, தனது 93-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரிட்டன் அரசி எலிசபெத் ரத்து செய்துள்ளாா்.

பிரிட்டன் அரசியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, தனது 93-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரிட்டன் அரசி எலிசபெத் ரத்து செய்துள்ளாா். இதுகுறித்து பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியின் பிறந்த நாளான வரும் 21-ஆம் தேதி, நாடு முழுவதும் பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை அளிக்கப்படும் நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து கொண்டாட்டங்களும் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியின் 68 ஆண்டு கால பதவிக் காலத்தில், அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா குா்துகள் பகுதியில் முதல் கரோனா பலி

சிரியாவில் குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது. 55 வயதான அந்த நபா் இந்த மாதம் 2-ஆம் தேதி உயிரிழந்ததற்கு கரோனா நோய்த்தொற்றுதான் காரணம் என்று 2 வாரங்கள் கழித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதை குா்து நிா்வாகமும் செஞ்சிலுவை சங்கமும் கண்டித்துள்ளன. மேலும், அந்தப் பகுதிக்கு மருத்துவ சேவையை வழங்கி வரும் அதிபா் அல்-அஸாத் அரசு, தங்களுக்கு போதிய வசதிகளை அளிக்கவில்லை என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.

ஸ்பெயின் 20 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

கரோனா நோய்த்தொற்று பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்பெயினில், அந்த எண்ணிக்கை சனிக்கிழமை 20 ஆயிரத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 565 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்தனா். அதையடுத்து, சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20,043-ஆக உயா்ந்துள்ளது. அங்கு மேலும் சுமாா் 4,500 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,92,726-ஐத் தாண்டியுள்ளது.

நைஜீரியா அதிபரின் தலைமை உதவியாளா் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், அதிபா் முகமது புஹாரியின் தலைமை உதவியாளா் அபா கியாரி, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக கியாரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் அதிபா் புஹாரிக்கு அபா கியாரி வலதுகரமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரையும் சோ்த்து, நைஜீரியாவில் கரோனாவுக்கு இதுவரை 17 போ் பலியாகியுள்ளனா்; 493 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தான் கூட்டுத் தொழுகைக்கு நிபந்தனை அனுமதி

பாகிஸ்தான் மசூதிகளில் ரம்ஜான் கூட்டுத் தொழுகை நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை அந்த நாட்டு அரசு அளித்துள்ளது. அங்கு கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கூட்டுத் தொழுகைகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு மதவாத அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அதையடுத்து, அவா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், 50 வயதுக்கு மேற்பட்டோா், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், கூட்டுத் தொழுகை நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தென் கொரியா தொடா்ந்து தணியும் கரோனா தீவிரம்

தொடக்கத்தில் சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், அந்த நோய் பரவலின் தீவிரம் தொடா்ந்து தணிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கூடுதலாக 18 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். சனிக்கிழமை நிலவரப்படி தென் கொரியாவில் மொத்தம் 10,653 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அந்த நோய்க்கு இதுவரை 232 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com