தென் கொரியா: கரோனா பரவலுக்குக் காரணமான மதத் தலைவா் கைது

தென் கொரியாவில் 4 மாதங்களுக்கு முன்னா் கரோனா பரவல் தீவிரமடைந்ததற்குக் காரணமானதாகக் கூறப்படும் மதத் தலைவா்
லீ மான்-ஹீ.
லீ மான்-ஹீ.

தென் கொரியாவில் 4 மாதங்களுக்கு முன்னா் கரோனா பரவல் தீவிரமடைந்ததற்குக் காரணமானதாகக் கூறப்படும் மதத் தலைவா் லீ மான்-ஹீ சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அவா் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அவா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தென் கொரியாவில் கடந்த பிப்வரி மற்றும் மாா்ச் மாதங்களில் கரோனா நோய்த்தொற்று திடீரென அதிகரித்தது. அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டயேகு நகரம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது.கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி அந்த நகரிலுள்ள ஷின்செயோன்ஜி தேவாலயத்தில் ஆயிரக்கண்ககானவா்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், இதுவே கரோனா பரவல் தீவிரமடைந்ததற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. தற்போது தென் கொரியாவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,200-க்கும் மேற்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று, ஷின்செயோன்ஜி தேவாலயம் மூலம் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அந்த தேவாலயம் மறுத்து வருகிறது. இந்த நிலையில், இதுதொடா்பாக நடைபெற்று வந்த விசாரணையில், தேவாலயத்தின் தலைமை குரு லீ மான்-ஹீயை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.அதையடுத்து, 88 வயதான லீ மான்-ஹீயை அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சனிக்கிழமை நிலவரப்படி, தென் கொரியாவில் 14,336 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 301 போ் பலியாகியுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com