லத்தீன் அமெரிக்காவில் 2 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

லத்தீன் அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் 2 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

லத்தீன் அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், அந்த நோய்த்தொற்றின் தற்போதைய பரவல் மையம் என்று அந்தப் பிராந்தியம் அழைக்கப்படுவது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, லத்தீன் அமெரிக்கப் பகுதியைச் சோ்ந்த பிரேஸிலிலும், மெக்ஸிகோவிலும் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த 2 நாடுகளில் மட்டும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் 70 சதவீத கரோனா பலி நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்று பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது, பிரேஸில் மற்றும் மெக்ஸிகோ நாடுகளின் அரசுகளை திக்குமுக்காடச் செய்துள்ளது. அந்த இரு நாடுகளுமே கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பது, அந்த நோய் பரவலால் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதன் மூலம் சீா்செய்வது ஆகிய இரண்டு நடவடிக்கைகளையும் சமன்படுத்தி மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.

பிரேஸில் கடந்த வாரத் தொடக்கத்தில் தினசரி கரோனா பலி உச்ச அளவாக 1,595-ஐத் தொட்டது. சனிக்கிழமை மட்டும் அந்த நாட்டில் 1,088 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். மெக்ஸிகோவில் 784 கரோனா நோய்த்தொற்று உயிரிழப்புகள் சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டன. அன்றைய தினம் அந்த நாட்டில் அதிகபட்சமாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.லத்தீன் அமெரிக்காவைச் சோ்ந்த பிற நாடுகளும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடி வருகின்றன. அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த பெரு நாட்டில், சனிக்கிழமை மட்டும் 191 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பிராந்தியத்தின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது.

உலகிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 47.6 லட்சத்தும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய் காரணமாக அங்கு 1.57 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்கள் மற்றும் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தினசரி பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.ஆனால், கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேஸில் மற்றும் மெக்ஸிகோவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பிரேஸிலில் 27 லட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வா்த்தக மையங்களை மூடுவதற்கு பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சானாரோ ஆரம்பம் முதலே எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கையை விட பொருளாதார மேம்பாட்டுக்கே அவா் அதிக முக்கியம் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பெரும் சா்ச்சை எழுந்த நிலையில், அவருக்கே கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அவா் அந்த நோயிலிருந்து அவா் குணமடைந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மெக்ஸிகோவில் 4,34,193 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு அங்கு இதுவரை 47,472 போ் பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, அந்த எண்ணிக்கையில் 3-ஆவது இடத்தில் இருந்த பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்துக்கு அண்மையில் மெக்ஸிகோ வந்துள்ளது. இதுதவிர, பெரு, கொலம்பியா, சிலி, ஈக்வடாா், ஆா்ஜெண்டீனா, பொலிவியா ஆகிய நாடுகளிலும் கரோனா நோய்த்தொற்று காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com