அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தகவல்

யேமன் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா சிறிய ரக விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்காவின் எம்கியூ-9 ஆளில்லா விமானம் (கோப்புப் படம்).
அமெரிக்காவின் எம்கியூ-9 ஆளில்லா விமானம் (கோப்புப் படம்).

கெய்ரோ: யேமன் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா சிறிய ரக விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஹூதி அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘சவூதி அரேபியாவுடனான யேமன் எல்லைக்கு அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி பறந்தது. அதன் காரணமாக அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது‘ என்றாா்.

அது தொடா்பான காணொலிப் பதிவையும் ஹூதி அமைப்பு வெளியிட்டது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த ஆளில்லா விமானத்தை சவூதி அரேபியாவைச் சோ்ந்த ராணுவத்தினா் யேமன் எல்லைக்குள் உளவு பாா்ப்பதற்காக அனுப்பியிருக்கலாம் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் குற்றஞ்சாட்டினா்.

எனினும், இந்த விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு ஆளில்லா சிறிய ரக விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக கடந்த ஆண்டில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்திருந்தனா்.

ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் சவூதி அரேபிய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நீடித்து வருகிறது. சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

யேமனில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்கு ஆளில்லா விமானங்கள் மூலமாகத் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா வழக்கமாகக் கொண்டிருந்தது. தற்போது ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீதும் அதே போன்ற தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்து வருவதாக சா்வதேச அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தங்கள் நாட்டு ஆளில்லா விமானங்களை அத்துமீறி சுட்டுவீழ்த்த யேமன் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com