அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் சேவையை வாங்க பேச்சுவார்த்தை: மைக்ரோசாஃப்ட்

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் சேவையை வாங்க பேச்சுவார்த்தை: மைக்ரோசாஃப்ட்


நியூயார்க்: அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா நடத்திய தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, இத்தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு பிரச்னையை காரணம்காட்டி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் அண்மையில் தடை செய்யப்பட்டன. இதேபோல், அமெரிக்காவிலும் தேசப் பாதுகாப்புக்கு டிக்டாக் செயலியால் ஆபத்து ஏற்படும் என எழுந்த புகாரைத் தொடர்ந்து, அச்செயலியை தடை செய்யப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே, டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை கையகப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:
மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, அதிபர் டிரம்ப் இடையேயான உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடர மைக்ரோசாஃப்ட் தயாராகவுள்ளது. அதிபரின் கவலைகளை பூர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வரவேற்கிறோம். டிக்டாக்கை முழுமையான பாதுகாப்பு மறு ஆய்வுக்கு உள்படுத்துவதற்கும், அமெரிக்காவுக்கு முறையான பொருளாதார நன்மைகளை அளிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளோம். இதுதொடர்பாக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸூடன் சில வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, எதுவாக இருந்தாலும் செப்டம்பர் 15}க்குள் முடித்துவிடுவோம். இந்தச் செயல்பாட்டின்போது அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையையும் எதிர்பார்க்கிறோம்.

பயனர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும், சம்பந்தப்பட்ட நாடுகளின் நிர்வாகத்தால் பொருத்தமான பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்தச் செயலியின் செயல்பாட்டு மாதிரி வடிவமைக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுக்கு வெளியே சேகரிக்கப்பட்டுள்ள பயனர்களின் தரவுகள் அமெரிக்காவுக்கு மாற்றப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக்டாக் சேவையை மைக்ரோசாஃப்ட் வாங்குவதை உள்ளடக்கிய திட்டத்தை ஆராய்வது குறித்த அறிவிப்பை மைக்ரோசாஃப்ட், பைட்டான்ஸ் ஆகியவை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் இந்தச் சந்தைகளில் டிக்டாக் சேவையின் செயல்பாடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com