நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்

பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் தவே ஏ. சோக்ஷி (39) ,  அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார். 
மருத்துவர் தவே ஏ. சோக்ஷி
மருத்துவர் தவே ஏ. சோக்ஷி


நியூயார்க்: பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் தவே ஏ. சோக்ஷி (39) ,  அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

நியாயார்க் நகர சுகாதார ஆணையராக இருந்த  மருத்துவர் ஆக்ஸிரிஸ் பார்போட் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து,   நகர சுகாதார மற்றும் மன நலவியல் துறை ஆணையராக சோக்ஷி  நியமிக்கப்பட்டார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நகர மேயர் பில் டி பிளாசியோஸ் கூறியது: 
கொவைட்-19 தொற்றின் சவால்களை எதிர்கொண்டு நியூயார்க் நகரின் பொது சுகாதார அமைப்பை வழி நடத்த  சோக்ஷி உதவியுள்ளார்.  ஆரோக்கியமான நகரத்திற்கான எங்கள் போராட்டத்தில், முக்கிய பொறுப்பை முன்னெடுக்க அவர்  தயாராக உள்ளார் என்பது எனக்குத் தெரியும். 

சோக்ஷிக்கு ஒரு 'அசாதாரண வரலாறு' உள்ளது. அவர் புலம்பெயர்ந்தோரின் குழந்தையாக, மிகப்பெரிய ஆற்றலுடன் அமெரிக்காவில் வளர்ந்தார். அந்த ஆற்றலை வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் கடினமாக உழைத்தார் என்றார்.

இரு தலைமுறைகளுக்கு முன் சோக்ஷியின் மூதாதையர் குஜராத் மாநிலத்தின் குக்கிராமத்திலிருந்து மும்பைக்கு சென்றுள்ளனர். பின்னர், அவரது தந்தை அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து லூசியானாவின் பேடன் ரூஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார். அங்கு பிறந்து வளர்ந்த சோக்ஷி, நாளடைவில் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில்  வெள்ளை மாளிகை உறுப்பினராக பணியாற்றினார். மேலும்,  முதன்மை சுகாதார ஆலோசகராகவும் இருந்தார்.
இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டில், அவரை நோய்த்தடுப்பு, சுகாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான ஆலோசனைக் குழுவில்  பராக் ஒபாமா நியமித்தார். 

இதுகுறித்து, தவே சோக்ஷி கூறுகையில்,"எங்கள் நகரம் வாழ்நாளில் இப்படியொரு பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

இந்த தருணத்தில் நியூயார்க் நகர மக்களுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டு ஒரு வலுவான, சிறந்த, ஆரோக்கியமான நகரமாக வெளிப்படுவோம் என்றார்.

நியூயார்க் நகரில் தற்போது 28,710 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாகவும், அதில், 2,507 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com