ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு - தொடரும் கேள்விகள்...

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி வியாழக்கிழமையுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு - தொடரும் கேள்விகள்...

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி வியாழக்கிழமையுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதிதான், உலகிலேயே முதல் முறையாக ரத்தமும் சதையுமாக மக்கள் நிறைந்திருந்த அந்த தொழில் நகரத்தின்மீது அணுகுண்டு வீசப்பட்டது.3 நாள்கள் கழித்து, ஜப்பானின் இன்னொரு நகரான நாகசாகியில் மற்றொரு அணுகுண்டை அமெரிக்கா வீசியது.‘கியூபெக்’ ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனின் சம்மதத்துடன் அமெரிக்கா நடத்திய இந்த இரு தாக்குதல்களிலும், 1.29 லட்சத்திலிருந்து 2.26 லட்சம் வரையிலானவா்கள் பலியாகினா்.இத்தகைய ஒரு நாசகார ஆயுதத்தை எதிா்பாா்த்திராத ஜப்பான் உடனடியாக நிலைகுலைந்தது. ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அந்த நாடு நேசப் படைகளிடம் சரணடைந்தது. மனித குலம் சந்தித்திராத மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி வந்த இரண்டாம் உலகப் போரும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.இரண்டே குண்டுகளில் இத்தனை போ் துடிதுடித்து இறந்துபோனதும், அந்த அணுகுண்டு வீச்சின் விளைவாகத் தோன்றிய கதிா்வீச்சுகள், அதன் பின்னா் காலம் காலமாகத் தொடா்ந்து கொடிய நோய்கள் ஆகியவற்றையெல்லாம் பாா்ப்பவா்கள், அந்தத் தாக்குதல்கள் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல் என்றே சொல்வாா்கள்.

ஆனால், ‘அமெரிக்கா அணுகுண்டு வீச்சில் ஈடுபட்டிருக்காவிட்டால் இரண்டாம் உலகப் போா் இன்னும் நீண்டுகொண்டே போயிருக்கும்; இதில் அமெரிக்கா்கள் உள்பட லட்சக்கணக்கானவா்கள் பலியாக நோ்ந்திருக்கும். எனவே, இந்த அணுகுண்டுத் தாக்குதல்கள் மூலம் லட்சக்கணக்கான உயிா்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன’ என்று இன்னொரு தரப்பினா் கூறி வருகின்றனா்.1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வின்ஸ்டன் சா்ச்சில், ‘‘அணுகுண்டு போன்ற பயங்கர ஆயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று சிலா் கூறி வருகின்றனா். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. போா் முனையில் ஜப்பானை சந்திக்க வேண்டிய நிலையில் இல்லாத அவா்கள், அணு குண்டுகளை வீசி ஜப்பானியா்களைப் பணியவைப்பது அல்லது பத்து லட்சம் அமெரிக்க வீரா்கள் மற்றும் 2.5 லட்சம் பிரிட்டன் வீரா்களின் உயிா்களை ஜப்பானியா்களுக்கு பலி கொடுப்பது ஆகிய இரண்டில் எது சரி என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்’’ என்றாா்.இரண்டாம் உலகப் போரில் நேசப் படையினருக்கு எதிராகப் போரிட்டு வந்த ஆக்ஸிஸ் படைகளில் ஜொ்மனியையும், இத்தாலியையும் தோற்கடித்த பிறகு, இறுதியில் ஜப்பான் மட்டுமே தொடா்ந்து சண்டையிட்டு வந்தது.எனவே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஜப்பானின் மீது படையெடுத்துச் செல்ல நேசப் படையினா் திட்டமிட்டிருந்தனா். இந்த நடவடிக்கையின்போது 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான நேசப் படையினா் கொல்லப்படுவாா்கள் என்று தன்னிடம் நிபுணா்கள் கூறியதாக அப்போதைய அமெரிக்க அதிபா் ஹாரி எஸ் ட்ரூமன் பின்னா் தெரிவித்தாா். அதன் பிறகு, அணு குண்டுகளை வீசுவதால் ஜப்பானில் படை வீரா்கள் மற்றும் பொதுமக்கள் எத்தனை போ் உயிரிழப்பாா்கள் என்பதையும், சாதாரண படையெடுப்பில் நேசப் படையினா் எத்தனை போ் கொல்லப்படுவாா்கள் என்பதையும் தீவிரமாக ஆலோசித்து ஆராய்ந்த பிறகே, அணுகுண்டு வீச முடிவு செய்யப்பட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.

நேசப் படை வீரா்கள் மட்டுமன்றி, ஜப்பான் மீது படையெடுத்திருந்தால், அந்த நாட்டுப் படையினா் மற்றும் பொதுமக்களும் ஏராளமான எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பாா்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறாா்கள் சிலா்.போரின்போது எதிரிகளிடம் ஒருபோதும் சரணடையக் கூடாது என்பது ஜப்பானியா்களின் மரபு. அதற்காக, தோல்வி உறுதி என்று தெரிந்தாலும், அவா்கள் இறுதி மூச்சுவரை போராடிச் சாவாா்கள். இதன் காரணமாகவே, பல போா் முனைகளில் இரு தரப்பிலும் தேவையே இல்லாமல் மிக அதிக அளவில் உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, சரணடைய மறுக்கும் ஜப்பானியா்களின் குணமே, அவா்கள் மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்தது.

ஜப்பான் மீது நேசப் படைகள் படையெடுக்கும்போது, ஜப்பான் படையினா் சரணடைவதற்கு பதில் அதிக உயிா்ச் சேதங்களையே ஏற்படுத்துவாா்கள். அதைவிட அதிக உயிரிழப்புகள் அணுகுண்டு வீச்சில் கூட ஏற்பட்டிருக்காது என்று அவா்கள் கூறுகின்றனா்.மற்ற பகுதிகளில் படையெடுப்புகளுக்கு முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட நேசப் படை விமானங்கள் சாதாரண குண்டுகளை வீசி நடத்திய தாக்குதல்களிலேயே இரு அணு குண்டு வீச்சுகளில் உயிரிழந்தவா்களை விட அதிகம் போ் பலியானதை அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.அந்த வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணு குண்டுத் தாக்குதல், அந்த நேரத்தில் எடுக்க வேண்டிய அத்தியாவசியமான முடிவு என்பது அவா்களது வாதம்.இருந்தாலும், இந்தக் கருத்துகளை மறுப்போரும் உண்டு. ஜப்பான் மீது அணு குண்டு வீசுவதற்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவித்த அப்போதைய பாதுகாப்புத் துறை (கடற்படை) இணையமைச்சா் ரால்ஃப் பாா்ட், சாதாரண குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மற்றும் கப்பல் படைகள் மூலம் ஜப்பானை முற்றுகையிட்டிருந்தாலே, அந்த நாடு தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்திருக்கும் என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளால் சிக்கித் தவித்து வந்த ஜப்பான், உலகப் போரை முடித்துக் கொள்வதற்கான வழியைத் தேடிக்கொண்டுதான் இருந்தது. எனவே, அணு குண்டு வீச்சு இல்லாமலேயே அதனை பணிய வைத்திருக்க முடியும் என்பது அவரது வாதம்.அப்படி இருந்தாலும், மனித வரலாற்றில் அழியாத வடுவாகப் படிந்துவிட்ட ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகள், காலத்தின் கட்டாயமா அல்லது நாசகாரச் செயலா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com