ஊழலுக்கு எதிராக வலிமையாகப் போராடும் சீனா!

ஒரு நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டுமாயின் அந்நாட்டு நிர்வாகம் மக்களை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்.
ஊழலுக்கு எதிராக வலிமையாகப் போராடும் சீனா!

ஒரு நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டுமாயின் அந்நாட்டு நிர்வாகம் மக்களை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். நிர்வாகத்தில் ஏற்படும் குளறுபடிகள், ஊழல்கள் ஆகியவை பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதுடன் மக்களின் கோபத்தையும் தூண்டுவிக்கும். அரசு அதிகாரிகளிடம் நிலவும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைக் களைவது ஒவ்வொரு நாட்டுக்கும் சவாலாகவே உள்ளது.

ஊழலை ஒழித்து மக்கள் சேவையை உன்னதமாக மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு திண்ணமான அரசு தேவைப்படுகிறது. நிர்வாகத்தில் அரசியல் செய்யாமல் மக்களை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் அரசுதான் ஒரு நாட்டுக்கு வேண்டும், அதுதான் மக்களின் ஆசையும் கூட. அந்தப் பாதையில் சீன அரசு பயணித்து வருகிறது. 

சீனாவில் வறுமை ஒழிப்பை நனவாக்குவதற்கு இவ்வாண்டு கடைசி ஆண்டு. அரசு நல்லெண்ணத்துடன் வகுக்கும் கொள்கைகள், திட்டங்கள் எல்லாம் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அதற்கு திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகள் தேவை. அதிகாரிகளிடம் இவை இரண்டும் குறையும்போதுதான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. இதனை நன்கு அறிந்து வைத்துள்ள சீன அரசு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களை நனவாக்க வேண்டுமென்றால் அதிகாரிகளின் கைகள் கறைபடியாமல் இருக்க வேண்டும், ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து வைத்துள்ளது. தவறிழைக்கும் அதிகாரிகள் மீது இரும்புக் கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்தும் வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிசிடிஐ எனப்படும் ஒழுக்கப் பரிசோதனைக்கான மத்திய ஆணையம் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது சீனாவின் மிக உயரிய ஒழுக்கப் பரிசோதனைக்கான அமைப்பாகும். இந்த ஆணையத்துக்கான 19ஆவது சிபிசி மத்திய ஆணையக் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறிய எச்சரிக்கை வாசகம்: “மக்கள் சேவையில் தவறு செய்யலாம் என்று அதிகாரிகளுக்கு தைரியம் வரக் கூடாது. ஊழலில் ஈடுபட முடியாத நிலை வர வேண்டும் அல்லது ஆசை இருக்கக் கூடாது,” என்றார்.

ஓர் அரசின், அரசுத் தலைவரின் இத்தகைய தீர்க்கமான எண்ணமும் செயல்பாடும் மட்டும்தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வள்ளுவர் கூறியதைப் போல, சொல்லிய வண்ணம் சீன அரசு செய்து காட்டி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 5 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை ஒழுங்கு நடைமுறை மற்றும் மேற்பார்வை அமைப்புகள் பதிவு செய்துள்ளது. இதில், 4.85 லட்சம் பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் மீது குற்றவியல் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனநாயகம் பேசும் நாடுகளில் வாக்குவங்கி, அரசியல், ஒருசார்பு உள்ளிட்ட காரணங்களால் தவறிழைத்தவர்களில் மிகவும் சொற்பானமானவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவது நினைவுகூரத்தக்கது. 

சீனாவில் 2020இல் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று இலக்கு நிர்ணயித்த பிறகு, 2012 முதல் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, சீன அரசு பல்வேறு புதிய சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இவையெல்லாம்தான், அரசின் மீது மக்கள் கொண்டுள்ள மனநிறைவு கணக்கெடுப்பில், ஜனநாயக நாடுகளைக் காட்டிலும், உலக அளவில் சீனா முன்னணியில் இருப்பதற்கான காரணமாகும்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஊழல் என்பது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. தவறிழைப்பவர்கள் அதிகம்; தண்டனைக்குள்ளாகுபவர்கள் குறைவு என்ற நிலை. இந்த நிலையைச் சரிசெய்தால் மட்டுமே, நூறு ரூபாய் நலத்திட்டம் நாட்டின் கடைக்கோட்டில் உள்ளவரைச் சென்றடையும்போதும் நூறு ரூபாயாகவே இருக்கும். இல்லாவிடில், ஓட்டைப் பானையில் நீர் எடுக்கும் கதையாகத்தான் அமையும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com