உலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியது கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியது கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 2 கோடியை கடந்தது.

ஜெனீவா/லண்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 2 கோடியை கடந்தது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 2 கோடியைக் கடந்தது. திங்கள்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,00,75,760-ஆக இருந்தது.

அமெரிக்காவில் 52,01,936 பேரும், பிரேஸிலில் 30,35,582 பேரும், ரஷியாவில் 8,92,654 பேரும், தென்னாப்பிரிக்காவில் 5,59,859 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,34,908-ஆக இருந்தது. அமெரிக்காவில் 1,65,628 பேரும், பிரேஸிலில் 1,01,136 பேரும், மெக்ஸிகோவில் 52,298 பேரும் உயிரிழந்தனா்.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது. நடப்பு வாரத்தில் உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7.50 லட்சத்தைத் தாண்டும்.

எனினும், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சில நாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் உலக நாடுகளுக்கு நியூஸிலாந்து சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அந்நாடுகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை மற்ற நாடுகளும் பின்பற்றலாம்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நாடுகள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் டெட்ரோஸ்.

நியூஸிலாந்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் தவிர மற்ற எவருக்கும் கடந்த 100 நாள்களாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com