பட்டினியில்லா உலகத்துக்கு உணவுப் பாதுகாப்பு முக்கியம்

கழனியில் விளையும் நெல்கதிர்கள் அரிசியாக மாறி சோறாக சமைக்கப்பட்டு பின்னர் சாப்பாட்டுத் தட்டுக்கு வருகிறது.
பட்டினியில்லா உலகத்துக்கு உணவுப் பாதுகாப்பு முக்கியம்
பட்டினியில்லா உலகத்துக்கு உணவுப் பாதுகாப்பு முக்கியம்

கழனியில் விளையும் நெல்கதிர்கள் அரிசியாக மாறி சோறாக சமைக்கப்பட்டு பின்னர் சாப்பாட்டுத் தட்டுக்கு வருகிறது. ஒரு அரசி சோறாக மாறும் இந்தப் பயணம் அவ்வளவு எளியதல்ல. சோற்றைத் தவிர, மற்ற உணவுப் பொருள்களும் அவ்வாறுதான். ஆனால், உணவின் மகத்துவத்தை அறியாதவர்கள் அதனை மிக எளிதாக வீணாக்கி விடுகின்றனர்.

ஒரு புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 1,50,000 டன் அளவு உணவு வீணாக்கப்படுகிறதாம். மற்ற நாடுகளிலும் இத்தகைய நிலைதான் இருக்கும். ஐரோப்பாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி டன் அளவிலான உணவு வீணாவதைத் தடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஒவ்வொரு நாடுகளும் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. உணவுப் பாதுகாப்பு என்பது போதிய தானியங்களை விளைவிப்பது மட்டுமல்ல, விளைந்த உணவுப் பொருள்களை விரயமாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவதும்தான்.

அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம். 2030-க்குள் பட்டினியில்லா உலகம் என்ற திசை நோக்கி நடைபோட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வாரம் வெளியிட்ட உத்தரவு ஒன்று இந்த இலக்குக்கு வலு சேர்க்கும் விதம் அமைந்துள்ளது. அதில், “நாம் உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது, சிக்கனமாகப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். சீனாவில் தானிய விளைச்சல் நன்றாக உள்ளது. இருப்பினும், உணவை வீணாக்குவதைத் தடுத்திட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மேலும் கவனம் செலுத்திட வேண்டும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்தப் பிரச்னை வீரியத்துடன் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. உணவை மனிதர்கள் வீணாக்குவது ஒருபுறம் என்றால், விளைந்த தானியங்களை சேமிக்க உரிய கிடங்குகள் இன்றி மழையிலும் வெயிலிலும் வீணாகும் உணவுப் பொருள்களின் அளவு மிக மிக அதிகம். 

“இந்தியாவில், மதுபானங்களைப் பாதுகாக்கக் கிடங்குகள் வசதி உண்டு. ஆனால், விளைந்த தானியங்களுக்கு இல்லை,” என்று கூறப்படுவதை உதாசீனப்படுத்த முடியாது. காய்கறிகள் பழங்கள் போன்ற உணவுப் பொருள்களை குறிப்பட்ட நாள்களுக்குள் பயன்படுத்தவில்லை என்றால் அழுகி விடும். இந்தப் பிரச்னையைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழி, அதனை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுவதுதான். சீனாவில் அத்தகைய மதிப்புக் கூட்டுப் பொருள்களை அதிகமாகப் பார்க்க முடியும்.  

சாப்பிடும்போது உணவு வீணாக்கப்படுவது கிராமங்களை விட நகரங்களில்தான் அதிகம்; குறிப்பாக, உணவு விடுதிகளில். உணவை வீணாக்குவது பற்றிய குறும்படங்கள் தற்போது அதிகம் வெளிவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் சலுகைகள் என்ற அறிவிப்புகளை அவ்வப்போது காண முடிகிறது. உணவுப் பாதுகாப்புக்கு ஒரு நாட்டின் அரசு என்னதான் வலிமையான நடவடிக்கை எடுத்தாலும், அது உணவு மேஜையில் அமரும் தனிமனிதனின் கையில்தான் உள்ளது.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com