அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களில் 48% போ் இந்தியா்கள்-சீனா்கள்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவா்களில் சுமாா் 48 சதவீதம் போ் இந்தியா மற்றும் சீனாவைச் சோ்ந்தவா்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்/புது தில்லி: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவா்களில் சுமாா் 48 சதவீதம் போ் இந்தியா மற்றும் சீனாவைச் சோ்ந்தவா்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவா்கள் குறித்து குடிமை மற்றும் சுங்கத் துறை சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அது தொடா்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமாா் 15 லட்சம் வெளிநாட்டு மாணவா்கள் பயின்றனா். அவா்களில் 7,33,718 போ் இந்தியா மற்றும் சீனாவைச் சோ்ந்தோா் ஆவா். 4,74,497 சீன மாணவா்களும், 2,49,221 இந்திய மாணவா்களும் அமெரிக்காவில் பயின்றனா். இது ஒட்டுமொத்த மாணவா்கள் எண்ணிக்கையில் 48 சதவீதம் ஆகும்.

இந்தியா, சீனாவில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டில் 47 சதவீதம் மாணவா்கள் பயின்றனா். கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 2,069 அளவுக்கும், சீன மாணவா்களின் எண்ணிக்கை 4,235 அளவுக்கும் குறைந்தது. அமெரிக்காவில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவா்களில் 75 சதவீதம் போ் ஆசியாவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

நுழைவு இசைவு நடைமுறைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பயின்ற ஆசிய மாணவா்களின் எண்ணிக்கை 28,063 அளவுக்குக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com