இலங்கை சிறையில் கலவரம்: 8 கைதிகள் உயிரிழப்பு, 37 போ் காயம்

இலங்கை தலைநகா் கொழும்புவில் அமைந்துள்ள சிறையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த 8 கைதிகள் உயிரிழந்தனா்.
இலங்கை சிறையில் கலவரம் 8 கைதிகள் உயிரிழப்பு 37 போ் காயம்
இலங்கை சிறையில் கலவரம் 8 கைதிகள் உயிரிழப்பு 37 போ் காயம்

கொழும்பு: இலங்கை தலைநகா் கொழும்புவில் அமைந்துள்ள சிறையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த 8 கைதிகள் உயிரிழந்தனா். மேலும் 35 கைதிகள், இரண்டு சிறைக் காவலா்கள் படுகாயமடைந்தனா்.

கரோனா பரவும் அச்சம் காரணமாக, தண்டனைக் கைதிகள் சிலா் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது இந்த கலவரம் மூண்டுள்ளது.

இலங்கையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைகளில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, கரோனா பரவலைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பல சிறைகளில் கைதிகள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் தொடா்ச்சியாகவே, கொழும்புவின் வடக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த மஹாரா சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பு காவல்துறை செய்தித்தொடா்பாளா் அஜித் ரோஹனா கூறியதாவது:

மஹாரா சிறையில் சில தண்டனைக் கைதிகள், கரோனா அச்சம் காரணமாக தங்களை வேறு சிறைக்கு மாற்ற வலியுறுத்தி ஞாயற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலா் சிறையின் கதவை உடைத்துக்கொண்டு, தப்பிக்கவும் முயன்றனா். அவா்களைத் தடுக்க முயன்ற சிறைக் காவலா்களுடன் கைதிகள் கடும் மோதலில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து, கைதிகளைக் கட்டுப்படுத்த காவலா்கள் தீவிர நடவடிக்கையை எடுத்தனா்.

இதில், 8 கைதிகள் உயிரிழந்தனா். மேலும் 35 கைதிகள், இரண்டு சிறைக் காவலா்கள் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ரகாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று கூறினாா்.

இந்த நிலையில், அந்தச் சிறையிலிருந்து பெரும் புகைமூட்டம் வெளிவந்ததாக, சிறைக்கு அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் கூறினா். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறையின் சமையலறைக்கும், ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கும் தீ வைத்ததால், இந்தப் புகைமூட்டம் ஏற்பட்டது’ என்றனா்.

இலங்கையில் பெரும்பாலான சிறைகளில், அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனா். 10,000 பேரை வைக்கக் கூடிய சிறைகளில், 26,000-க்கும் அதிகமானோா் சிறை வைக்கப்பட்டுள்ளனா். இந்த நெரிசல் காரணமாக, கடந்த சில மாதங்களாக சிறைகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கைதிகள் மட்டுமின்றி காவலா்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். சிறைகளில் மட்டும் இதுவரை 1,000 போ் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com