400 ஆண்டுகளுக்குப் பின் இன்று வானில் தோன்றும் அரிய நிகழ்வு!

சூரியக் குடும்பத்தில் வியாழனும், சனியும் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு இன்று(டிச.21) நிகழவிருக்கிறது. 
வியாழன், சனி கோள்கள்
வியாழன், சனி கோள்கள்

சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்கள் வியாழன் மற்றும் சனி. வியாழன் கோள் பூமியிலிருந்து 88.64 கோடி கிலோமீட்டர் தூரத்திலும், சனிக்கோள் பூமியிலிருந்து 161.63 கோடி கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளன. 

சூரியக் குடும்பத்தின் 5 ஆவது கோளான வியாழன், சூரியனை ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 11.9 ஆண்டுகள். அதேபோன்று சனி, சூரியனை ஒருமுறை சுற்றிவர 29.5 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. 

சூரியக் குடும்பத்தின் அனைத்து கோள்களும் வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதனால் கோள்கள் நெருங்கி வரும் நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. 

அந்தவகையில், வியாழனும், சனியும் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகவும் நெருக்கமாக வருகின்றன. முன்னதாக 1623 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு கோள்களும் நெருங்கும் நிகழ்வு நடைபெறும் என்றாலும் அவற்றின் தூரம் சற்று அதிகமாக இருக்கும். இதேபோன்று 0.1 டிகிரி இடைவெளயில் அடுத்த நிகழ்வு 2080ல் நிகழும் என்று வானியலாளர்கள் கணிக்கின்றனர். முன்னதாக 2040, 2080லும் இரு கோள்களும் நெருங்கி வரும். அப்போது இரு கோள்களுக்குமான இடைவெளி 1.1 டிகிரியாக இருக்கும். 

2020 டிசம்பர் 21 ஆம் தேதி(இன்று) 0.1 டிகிரிக்கும் குறைவான தூரத்தில் வியாழனும், சனியும் நெருங்கி வருகின்றன. ஆனால், இந்த நிகழ்வின்போது இரு கோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 7,34,000 கிலோமீட்டராக இருக்கும். 

இன்றைய தினம் மாலை சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் இந்த நிகழ்வைக் காண முடியும். தென்மேற்கு வானில் இரு கோள்களும் இரு நட்சத்திரங்கள் போன்று தோன்றும். உலகம் முழுவதுமுள்ள மக்கள் இதனை காண முடியும். 

இதில் வியாழன் கோள் சற்று பிரகாசமாகவும், சனிக் கோள் சற்று மந்தமாகவும் தெரியும். முதலில் வியாழன் கோளுக்கு இடதுபுறத்திற்கு மேலே சனி தோன்றும். பின்னர் நகர்வினால் சிறிது நேரத்தில் இரண்டும் இடம் மாறும். வெறும் கண்களால் பார்க்கும்போது பெரிய நட்சத்திரங்கள் போல் தெரியும் இவற்றின் செயல்பாட்டை தெளிவாக காண தொலைநோக்கியை பயன்படுத்தலாம். இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தோன்றும். மேலும் இவரின் நகர்வையும் தொலைநோக்கி மூலமாக துல்லியமாக காணலாம். 

மேலும் இன்றைய தினம் 'வின்டர் சால்ஸ்டைஸ்'(winter solstice) எனப்படும் 'குளிர்கால சங்கராந்தி' நாளாகும். பூமி சூரியனை விட்டு அதிகபட்ச தூரத்தில் இருக்கும் நாளாகும். இதனால் பூமியில் இன்று நீண்ட இரவு, குறுகிய பகல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com