புதிய கரோனா வைரஸ்: சர்வதேச விமானச் சேவைக்கு துருக்கி, சௌதி அரேபியா தடை

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை அடுத்து, சர்வதேச விமான சேவைக்கு சௌதி அரேபியாவும் துருக்கியும் தடை விதித்துள்ளன.
புதிய வகை கரோனா வைரஸ்: சர்வதேச விமானச் சேவைக்கு துருக்கி, சௌதி அரேபியா
புதிய வகை கரோனா வைரஸ்: சர்வதேச விமானச் சேவைக்கு துருக்கி, சௌதி அரேபியா

ரியாத்: பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை அடுத்து, சர்வதேச விமான சேவைக்கு சௌதி அரேபியாவும் துருக்கியும் தடை விதித்துள்ளன.

பிரிட்டனில் அதிவேகமாகப் பரவும் வகையிலான கரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை அடுத்து ஒரு வார காலத்துக்கு சர்வதேச விமான சேவைக்குத் தடை விதித்திருப்பதாக சௌதி நாட்டு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து சௌதி அரேபியா வந்தவர்கள், தங்களை இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவும், கடந்த மூன்று மாதங்களில், இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனில் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஏற்கனவே நெதா்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜொ்மனியும் பிரான்ஸும் பரிசீலித்து வருகின்றன.

இதற்கிடையே, பிரிட்டன், டென்மார்க், நெதர்லாந்து, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமானச் சேவையை துருக்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தகவலை துருக்கியின் சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

அதேவேளையில், வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை தாயகம் அழைத்து வர துருக்கி அரசு சிறப்பு விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

புதிய கரோனா வைரஸ் குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து நெதா்லாந்து வந்த ஒருவரது உடலில் புதிய ரக கரோனா தீநுண்மி தொற்றியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அதனைத் தொடா்ந்து, பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் நெதா்லாந்து தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை அந்தத் தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனிலிருந்து இறக்குமதியாவதைத் தடுக்கவும் அதன் மூலம் தங்கள் நாட்டில் கரோனா பரவல் தீவிரமெடுப்பதைத் தவிா்க்கவும் இந்தத் தடை விதிக்கப்படுவதாத நெதா்லாந்து தெரிவித்துள்ளது.

புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக நெதா்லாந்து கூறியுள்ளது.

பிரிட்டனில் புதிய ரக கரனோ தீநுண்மி பரவும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்தத் தீநுண்மி தொடா்பான தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும் ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரான்ஸ்: பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பிரான்ஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரெஞ்சு தொலைக்காட்சியான பிஎஃப்எம்டிவி தெரிவித்தது.

இதுதொடா்பான அறிவிப்பை பிரான்ஸ் அரசு விரைவில் வெளியிடும் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடுமையானது கரோனா கட்டுப்பாடுகள்

தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நோய் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது:

வேகமாகப் பரவி வரும் புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய ரகத்தைவிட இந்த புதிய ரக தீநுண்மி 70 சதவீதம் அதிக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு இந்தத் தீநுண்மி காரணமாக இருக்கலாம்.

முந்தைய தீநுண்மையை விட புதிய ரக கரோனா தீநுண்மி உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கோ, நோய் பாதிப்பை அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com