
பிரான்ஸில் முதல் முறையாக ஒருவருக்கு பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரிட்டனில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு, புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பிரிட்டனிலிருந்து கடந்த 29-ஆம் தேதி அவா் பிரான்ஸ் வந்தாா். அவருக்கு கரோனா பரிசோதனை கடந்த 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
அவரிடம் கரோனா நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவருடன் நெருக்கமாக இருந்தவா்கள் குறித்த விவரங்களைத் தீவிரமாக சேகரித்து வருகிறோம்.
புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை நிபுணா்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தீநுண்மி, சாதாரண கரோனாவைவிட 70 சதவீதம் அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அந்தத் தீநுண்மியால் உடல் நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகமில்லை என்றாலும், அதன் தீவிரமாகப் பரவும் தன்மை உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி பிரான்ஸில் 25,47,771 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 62,427 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.