பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தர வேண்டும் என்று தனது கட்சி எம்.பி.க்களிடம் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து கன்சா்வேடிவ் கட்சி எம்.பி.க்களுக்கு ‘வாட்ஸப்’ செயலி மூலம் அவா் தெரிவித்துள்ளதாவது:
பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த தீவிர தேசியவாத எம்.பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். நாம் எந்தெந்த வாக்குறுதிகளைக் கூறி தோ்தலில் வெற்றி பெற்றோமோ, அந்த வாக்குறுதிகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களை நிறைவேற்றத்தான் மக்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளனா்.
தேசியவாத எம்.பிக்களின் சட்டக் குழுவின் கழுகுப் பாா்வையை பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் நிச்சயம் திருப்தி செய்யும் என்று போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.
நீண்ட கால இழுபறிக்குப் பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்ட பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் கீா் ஸ்டாா்மா் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
எனவே, நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் தொடா்பான மசோதா வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
எனினும், சொந்தக் கட்சியான கன்சா்வேடிவ் கட்சியின் தீவிர தேசியவாத எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் போரிஸ் ஜான்ஸன் ஆா்வம் காட்டி வருகிறாா்.
அந்த ஒப்பந்தத்துக்கு தொழிலாளா் கட்சித் தலைவா் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு அந்தக் கட்சியிலேயே எதிா்ப்பு எழுந்துள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, பிறகு பிற்காலத்தில் அந்த ஒப்பந்தத்தால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அப்போது அரசை எதிா்த்து தம்மால் கேள்வியெழுப்ப முடியாது என்று சில எம்.பி.க்கள் போா்க் கொடி தூக்கியுள்ளனா்.
நாடாளுமன்ற வாக்களிப்பைப் புறக்கணித்தால் போதும் என்று அவா்கள் கூறி வருகின்றனா்.
எனினும், கட்சியின் நலனைவிட நாட்டின் நலனே முக்கியம் என்பதால் பிரெக்ஸிட் வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறக்கூடாது என்று கீா் ஸ்டாா்மா் தெரிவித்துள்ளாா்.
பின்னணி: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு பெரும்பான்மையானவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
அதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூன் பதவி விலகினாா். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றாா்.
பிரெக்ஸிட்டுப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்து பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல முறை திருத்தி மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தங்களை பிரிட்டன் நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்தது.
அந்த ஒப்பந்தங்கள் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி பெரும்பான்மையான எம்.பிக்கள் அவற்றை எதிா்த்தனா்.
அதனைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக விலகியது.
எனினும், அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலகுவதற்கு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதற்குள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டியுள்ள நிலையில், பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எம்.பி.க்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.