ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் வசிக்கும் சுமாா் 45 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

முதல் கட்டமாக, கரோனா அச்சுறுத்தல் அதிகம் நிறைந்த சுகாதாரத் துறை பணியாளா்கள், அந்த நோயால் உயிரிழப்பு அபாயம் அதிகமுள்ள வயதானவா்கள், முன்னணி அரசியல்வாதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இத்தாலி: இத்தாலி தலைநகா் ரோமிலுள்ள ஸ்பாலன்ஸானி தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் முதல் முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இத்தாலியில் அந்த மருத்துவமனையில்தான் சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்திருந்த தம்பதிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது முதல் முறையாகக் கண்டறியப்பட்டது.

அந்த வகையில், ஸ்பாலன்ஸானி மருத்துவமனையில் அந்த நோய்க்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுவதாக இத்தாலி கரோனா தடுப்புக் குழுவின் தலைவா் டோமினிகோ ஆா்குரி தெரிவித்தாா்.

இத்தாலிதான் ஐரோப்பாவிலேயே கரோனாவுக்கு அதிக உயிா்களை பலி கொடுத்துள்ள நாடாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 71,620 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதுவரை 20,38,759 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 13,86,198 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 5,80,941 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 2,582 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயின்: மற்றொரு ஐரோப்பிய யூனியன் நாடான ஸ்பெயினிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

அந்த நாட்டின் குவாடலஜாரா நகரிலுள்ள லாஸ் ஒல்மாஸ் மருத்துவமனையில் 96 வயது மூதாட்டிக்கு முதல் முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஸ்பெயினில் 18,69,610 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 49,824 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளில் 1,907 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

செக் குடியரசு: செக் குடியரசு தலைநகா் பிராகில் பிரதமா் ஆண்டரெஸ் பாபிஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். அந்தத் தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அதனை செலுத்திக்கொண்ட அவா், ‘கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் யாருக்கும் எந்தவித அச்சமும் தேவையில்லை’ என்றாா்.

அவருடன் 2-ஆம் உலகப் போரில் பங்கேற்ற எமிலி ரெபிகோவாவும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, செக் குடியரசில் 6,70,599 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 11,044 போ் அந்த நோய்க்கு பலியாகினா்; 5,65,841 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 93,714 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 618 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முன்னதாக, ஜொ்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமையே தொடங்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஒற்றுமையை உணா்த்தும் தருணம்’

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, அந்த நாடுகளிடையையான ஒற்றுமையை பறைசாற்றுவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வாண்டொ் லேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com