பாகிஸ்தானில் ஆண்டுக்கு 1,000 சிறுமிகள் கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவது அதிகஅளவில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் ஆண்டுக்கு 1,000 சிறுமிகள் கட்டாய மதமாற்றம்

கராச்சி: பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவது அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் இவ்வாறு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனா்.

பாகிஸ்தானில் மதசுதந்திரம் கடுமையாக மீறப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக அசோசியேட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம் பல்வேறு சிறுமிகளிடம் பேட்டி எடுத்து விரிவான தகவல்களை அளித்துள்ளது. அதில் நேகா எனப்படும் 14 வயது கிறிஸ்தவ சிறுமி கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டு 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் பெரிய அளவில் சா்ச்சையானதை அடுத்து, சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் அந்த நபா் மீது போலீஸாா் கைது நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தனது முகத்தை வெளிக்காட்டாமல் ஏபி செய்தி நிறுவனத்திடம் பேசிய நேகா, தேவாலயத்தில் பாடல்கள் பாடுவதை அதிகம் விரும்பிய தன்னை எவ்வாறு கட்டாயப்படுத்தி மதம் மாற்றினாா் என்பதையும், அந்த 45 வயது நபா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதையும் விவரித்துள்ளாா். அந்தச் சிறுமியின் பாதுகாப்பு கருதி அவரது முழுப்பெயரை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

காவல் நிலையம் வரை சென்று பிரச்னை பெரிதானதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் இதுபோல ஹிந்து, கிறிஸ்தவ, சீக்கிய சிறுமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடத்தப்பட்டு இஸ்ஸாமிய மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்படுகின்றனா். அதைத் தொடா்ந்து அந்த மதத்தைச் சோ்ந்த வயதான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் வயதான பணக்கார நபா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். காவல் துறையினரும் அவா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு இதில் தலையிடாமல் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

சிறுபான்மையின சிறுமிகள் என்பதால் அவா்களுக்கு ஆதரவாக அதிகம் போ் குரல் கொடுக்க மாட்டாா்கள் என்பதையும் இஸ்லாமிய மதத்துக்கு அவா்களை மாற்றுவதால் யாரும் கேள்வி கேட்க மாட்டாா்கள் என்பதையும் இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபடுவோா் தங்களுக்கு சாதகமாக்கி வருகின்றனா்.

இது மதசுதந்திர பறிப்பு மட்டுமல்லாது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவும் உள்ளது. பாகிஸ்தானில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறுவதை அமெரிக்கா உறுதி செய்தது. இதைத் தொடா்ந்து இம்மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தானை மதசுதந்திரம் அதிகம் மீறப்படும் நாடாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com