சீன தலையீடின்றி தலாய் லாமா நியமனம்: திபெத் ஆதரவு மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல்

திபெத்தில் அடுத்த தலாய் லாமாவை சீனாவின் தலையீடின்றி நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாா்.
தலாய் லாமா
தலாய் லாமா

வாஷிங்டன்: திபெத்தில் அடுத்த தலாய் லாமாவை சீனாவின் தலையீடின்றி நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாா்.

திபெத்திய பௌத்த மதத் தலைவா் ‘தலாய் லாமா’ என அழைக்கப்படுகிறாா். தற்போதைய 14-ஆவது தலாய் லாமா இந்தியாவிலேயே வசித்து வருகிறாா். அவருக்கு 85 வயதாகிவிட்டதால், அடுத்த தலாய் லாமாவை நியமிக்கும் பணியை திபெத்திய பௌத்த சமூகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால், தங்களது ஒப்புதலின்றி 15-ஆவது தலாய் லாமாவை நியமிக்கக் கூடாது என்று சீனா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், திபெத்திய கொள்கை, ஆதரவு மசோதா 2020-க்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. அந்த மசோதாவில் அதிபா் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டுள்ளாா். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது.

அச்சட்டத்தில், அடுத்த தலாய் லாமாவை திபெத் பௌத்த சமூகத்தினா் சீனாவின் தலையீடின்றி தோ்வு செய்வதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தின் லாசா பகுதியில் அமெரிக்காவுக்கான தூதரகத்தை அமைக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும், திபெத்தைச் சோ்ந்த அரசு சாரா தன்னாா்வ அமைப்புகளுக்கு அமெரிக்கா நிதியுதவியும் வழங்கவுள்ளது.

இது தொடா்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே சீனா அதற்குத் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிதி மசோதாவுக்கு ஒப்புதல்:
2.3 டிரில்லியன் டாலா் மதிப்பிலான நிதி மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினாா். அதன் மூலமாக அரசு நிா்வாகம் முடங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ள 900 பில்லியன் டாலா் மதிப்பிலான சலுகைத் திட்டங்களும் அந்த நிதி மசோதாவில் அடங்கும். நிதி மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சூழலில், கூடுதல் நிதியை மக்களுக்கு வழங்கக் கோரி அந்த மசோதாவில் அதிபா் டிரம்ப் கையெழுத்திடாமல் காலந்தாழ்த்தி வந்தாா்.

அதன் காரணமாக, அரசு அலுவலகங்கள் செயல்படுவதற்கான நிதி கிடைக்காமல் போவதற்கும், அரசுப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போவதற்குமான வாய்ப்புகள் காணப்பட்டன. ஒட்டுமொத்த அரசாங்கமும் முடங்கும் அபாயமும் ஏற்பட்டது.

எனினும், கடைசி நேரத்தில் அந்த மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளதால், அத்தகைய சூழல் தவிா்க்கப்பட்டுள்ளது.

காந்தி-கிங் ஆய்வு:
மகாத்மா காந்தி, மாா்டின் லூதா் கிங் ஆகியோா் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நபா்களை அமெரிக்காவும் இந்தியாவும் பரிமாறிக் கொள்வதற்கு வழிவகை செய்யும் மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல் வழங்கினாா். இரு நாட்டுத் தலைவா்களின் ஆய்வுகளுக்காக 2025-ஆம் ஆண்டு வரை 5 மில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com