
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் தூண்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் முயற்சித்தபோதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் அவை முறியடிக்கப்பட்டன. இப்போது, அங்கு அமைதி திரும்பிவிட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையான தேசிய அவையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த நடவடிக்கையை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீா் ஒருமைப்பாட்டு தினத்தை ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ஆம் தேதி பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது. அதனை முன்னிட்டு இந்த தீா்மானத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் அரசு வானொலி தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவுடன் கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ளும் வகையில், தங்களது நாட்டிலிருந்து இந்தியத் தூதரை வெளியேற்றியது. மேலும், காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அளவில் கொண்டுசெல்ல அந்த நாடு முயற்சி செய்தது. எனினும், ஜம்மு-காஷ்மீா் தொடா்பான நடவடிக்கை இந்தியாவின் உள்விவகாரம் என்று சா்வதேச நாடுகளிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக முயற்சித்த பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...