ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?

பிரபல நடிகை மற்றும் இயக்குநரான நடாலி போர்ட்மேன் 92-ஆவது ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின் போது வித்யாசமான ஒரு உடை அணிந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?

பிரபல நடிகை மற்றும் இயக்குநரான நடாலி போர்ட்மேன் 92-ஆவது ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின் போது வித்யாசமான உடை அணிந்து வந்தார். அந்த உடையமைப்பிலேயே தனது கருத்தை பிரதிபலித்தார். 

பெண் இயக்கநர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது ஆடை மற்றும் தொப்பியில் பெண் இயக்குநர்களின் பெயர்களையும் அவர்கள் இயக்கிய திரைப்படங்களின் பெயர்களையும் எம்பிராய்டரி செய்து ஆஸ்கர் விருதின் ரெட் கார்பெட் விழாவுக்கு வந்த நடிகை நடாலி போர்ட்மென் பார்வையாளர்களின்  ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தார்.

மேலும் நடாலி போர்ட்மென் அணிந்திருந்த கவுனில் எம்பிராய்டரி செய்யப்பட்ட பெண் இயக்குநர்களின் பெயர்கள்: லோரன் ஸ்கஃபாரியா ("ஹஸ்டலர்ஸ்"), லுலு வாங் ("தி ஃபார்வெல்"), கிரெட்டா கெர்விக் ("லிட்டில் வுமன்"), மரியெல்லே ஹெல்லர் ("எ ப்யூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹுட்"), மெலினா மாட்ஸெளகாஸ் ("குவின் & ஸ்லிம்") அல்மா ஹாரெல் ("ஹனி பாய்"), செலின் சியாம்மா ("போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி இன் ஃபையர்") மற்றும் மேட்டி டியோப் ("அட்லாண்டிக்ஸ்").

விருது வழங்கும் விழாக்களில் நடாலி போர்ட்மேன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. இதற்காக அவர் கடுமையான விமரிசனத்துக்கும் உள்ளாவது வழக்கம்தான்.

2018-ஆம் ஆண்டில், சிறந்த இயக்குநர் விருதினை அவர் பெறும்போதும் கூட, நடாலி தனது கருத்தை வெளிப்படையாகக் கூறினார், ''என்னைத் தவிர இங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்கள்தான்" என்றார்.

92-வது அகாடமி விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, ​​இந்த ஆண்டு எந்தவொரு பெண் இயக்குநர்களையும் ஏன் பரிந்துரைக்கவில்லை என்றும், இது ஒரு பின்னடைவு என்றும் விமரிசித்துள்ளார்.

ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே, இதுவரை சிறந்த இயக்குநர்களுக்கான பிரிவில் ஐந்து பெண் இயக்குநர்கள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில், கேத்ரின் பிகிலோ (ஹர்ட் லாக்கர்) என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.

எனவே ஒரு பெண் இயக்குநர் விடுபடுவது இது முதல் முறை அல்ல.

போங் ஜூன் ஹோ ('பாரசைட்'), சாம் மென்டிஸ் ('1917), டோட் பிலிப்ஸ் ('ஜோக்கர்'), மார்ட்டின் ஸ்கோர்செஸி ('தி ஐரிஷ்மேன்'), க்வென்டின் டரான்டினோ ('ஒன்ஸ் அபான் எ டைம் ஹாலிவுட்') ஆகியவர்கள் சிறந்த இயக்குநர் பிரிவுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

ஹாவாகின் ஃபீனிக்ஸின் 'ஜோக்கர்' 11 இடங்களுடன் பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, நெட்ஃபிக்ஸ் நாடகமான 'தி ஐரிஷ்மேன்' மற்றும் க்வென்டின் டரான்டினோவின் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' ஆகியவை தலா பத்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.

சாம் மென்டிஸின் போர் திரைப்படமான '1917' பத்து பரிந்துரைகளையும், நோவா பாம்பாக்கின் 'மேரேஜ் சாகா' ஏழு பரிந்துரைகளையும் கொண்டுள்ளது.

தென் கொரிய திரைப்படமான 'பாராசைட்' சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த திரைப்பட எடிட்டிங் ஆகிய ஆறு பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 

ஹாலிவுட்டின் மிகப் பெரிய விருது நிகழ்ச்சியான ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாமலேயே நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com