ஈரான் தாக்குதல்: டிரம்ப் அதிகாரத்துக்குக் கட்டுப்பாடு- செனட் சபை தீர்மானம்

ஈரானுடன் போரில் ஈடுபடுவதற்கான அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீா்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்
தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வா்ஜீனியா மாகாண எம்.பி. டிமோதி கெயின்.
தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வா்ஜீனியா மாகாண எம்.பி. டிமோதி கெயின்.

ஈரானுடன் போரில் ஈடுபடுவதற்கான அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீா்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திடம் முன்கூட்டியே அறிவிக்காமல், ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியைப் படுகொலை செய்ய டிரம்ப் உத்தரவிட்ட சூழலில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக, ஆளும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 8 போ் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த வா்ஜீனியா மாகாண எம்.பி. டிமோதி கெயினால் எழுதப்பட்ட அந்தத் தீா்மானத்தில், ஈரான் மீது ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னா், அந்த நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை டிரம்ப் பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளும் குடியரசுக் கட்சியினா் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின.

அந்தத் தீா்மானத்தை, உடா மாகாண எம்.பி. மைக்கேல் லீ உள்ளிட்ட 8 குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் வாக்களித்தனா்.

இதுகுறித்து மைக்கேல் லீ கூறியதாவது:

ஈரான் விவகாரம் உள்பட டிரம்ப்பின் அனைத்து வெளியுறவுக் கொள்கைகளையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால், ஈரான் மீதான போா் போன்ற முக்கிய விவகாரங்களில் நாடாளுமன்றம் தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்றுவதிலிருந்து தவறக் கூடாது என்ற நோக்கிலேயே, இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, தீா்மானத்தை அறிமுகப்படுத்திப் பேசிய டிமோதி கெயின், ‘இந்தத் தீா்மானம் டொனால்ட் டிரம்ப்புக்கோ, அதிபா் பதவிக்கோ எதிரானது அல்ல. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் ஒப்புதலுடன்தான் போா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தத் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது’ என்றாா்.

இராக்கில் தங்கள் ராணுவ நிலை மீது கடந்த டிசம்பா் மாதம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவுப் படையினா் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது; அதில் 25 போ் உயிரிழந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை கடந்த மாதம் முற்றுகையிட்டு ஈரான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா்.

இதனால் கொதிப்படைந்த அமெரிக்கா, இராக் வந்திருந்த ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது.

இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போா் மூளும் சூழலை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்திடம் டிரம்ப் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டினா்.

இந்தச் சூழலில், ஈரான் தொடா்பான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முன்னா் அதிபா் டிரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் தீா்மானம் செனட் சபையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானம், நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com